நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டதாக புகார் எதிரொலி: ஏரிப்பாக்கம் கிராமத்தில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு

ஏரிப்பாக்கம் கிராமத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை கவர்னர் கிரண்பெடி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும், அதற்காக அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்தும் கவர்னர் உத்தரவிட்டார். கவர்னர் ஆ

Update: 2016-12-25 22:45 GMT

நெட்டப்பாக்கம்

ஏரிப்பாக்கம் கிராமத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை கவர்னர் கிரண்பெடி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும், அதற்காக அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்தும் கவர்னர் உத்தரவிட்டார்.

கவர்னர் ஆய்வு

புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் தொகுதி ஏரிப்பாக்கம் கிராமத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பெடிக்கு புகார்கள் சென்றன. அதைத் தொடர்ந்து நேற்றுக் காலை கவர்னர் கிரண்பெடி, அதிகாரிகளுடன் ஏரிப்பாக்கம் கிராமத்துக்கு சென்றார்.

அப்போது அங்குள்ள மக்கள் குளம் மற்றும் பாசன வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது குறித்து புகார்கள் அளித்தனர். அதைத் தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி அந்த ஆக்கிரமிப்புகளை நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். அது தொடர்பான பணிகளில் ஈடுபட வில்லியனூர் துணை கலெக்டர் விஜயகுமார் மற்றும் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சாமிநாதன் தலைமையில் ஒரு குழு அமைத்து உடனடியாக நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி கூறினார். ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார்.

கரியமாணிக்கம்

அதன் பின்னர் நெட்டப்பாக்கத்தை அடுத்த கரியமாணிக்கம் கிராமத்தில் உள்ள குப்பைக்கிடங்குக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அதன் அருகிலேயே ஆழ்துளை கிணறு அமைத்து அதிலிருந்து குடிநீர் வினியோகிக்கப்படுவதையும் பார்வையிட்டார். குடிநீர் எடுக்கும் இடம் அருகே குப்பை கொட்டுவதை கண்ட கவர்னர், இதனால் குடிநீர் மாசடையும் என்றும், பொது மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் சுத்தமானதாகவும் சுகாதாரமானதாகவும் இருக்க வேண்டும். இதற்காக அரசு பெருமளவில் பணம் செலவு செய்கிறது என்று அதிகாரிகளை கண்டித்தார்.

அதைத் தொடர்ந்து அதிகாரிகளிடம் அந்த குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வேறு இடத்துக்கு மாற்றவும், மேலும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் குப்பைகளை மறுசுழற்சி செய்யவும் தேவையான நடவடிக்கை எடுக்கும்படியும் அவர் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சவுந்தரராஜன், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகர், பாகூர் தாசில்தார் கார்த்திகேயன், புதுச்சேரி மேற்கு போலீஸ் சூப்பிரண்டு தெய்வசிகாமணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்