பணத்தாள் செல்லாது என்ற அறிவிப்பின் எதிரொலி வங்கிகளில் காசோலை புத்தங்களின் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதி
பணத்தாள் செல்லாது என்ற அறிவிப்பின் எதிரொலியாக வங்கிகளில் காசோலை புத்தங்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். பணத்தாள்கள் இந்தியாவில் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவின் பொருளாதாரத்தை சீ
அறந்தாங்கி,
பணத்தாள் செல்லாது என்ற அறிவிப்பின் எதிரொலியாக வங்கிகளில் காசோலை புத்தங்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
பணத்தாள்கள்
இந்தியாவில் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைப்பதற்காகவும், அச்சடித்து வெளியிட்ட ரூ.1,000, 500 மதிப்புடைய கள்ளநோட்டுகள் போன்றவற்றை ஒழிப்பதற்காகவும், கடந்த மாதம் 8–ந் தேதி இந்தியாவில் ரூ.1000 மற்றும் 500 பணத்தாள்கள் செல்லாது என பிரதமர் நரேந்திரமோடி அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களிடம் இருந்த பழைய ரூ.1,000 மற்றும் 500 பணத்தாள்களை வங்கியில் செலுத்தி வருகின்றனர். இதற்கு 30–ந் தேதி வரை காலக்கெடு உள்ளது.
சேமிப்பு கணக்கு
வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்கப்படும்போதே காசோலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 2010–ம் ஆண்டு முதல் சி.டி.எஸ் எனப்படும் உயர்தொழில்நுட்பம் கொண்ட காசோலைகள் அனைத்து வங்கிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பணத்தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பால் வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள மற்றும் காசோலை பெற்று பயன்படுத்தாத வாடிக்கையாளர்களும் தற்போதைய சூழ்நிலையில், தங்களிடம் உள்ள காசோலைகள் மூலம் வரவு செலவு செய்து வருகின்றனர். ஊராட்சி அளவிலான ஊர்களில் இயங்கிவரும் வங்கி கிளைகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை நாள் ஒன்றுக்கு சுமார் 10 முதல் 30 வரை காசோலைகள் வரவு செலவிற்காக வந்தன. ஆனால் தற்போது 50 முதல் 200 வரை காசோலைகள் வரவு செலவிற்கு வந்து செல்கின்றன.
20 நாட்கள் வரை...
இதனால் தற்போது காசோலைகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருவதால், வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள காசோலைகள் முடிந்தபின்பு புதிய காசோலை புத்தகங்களுக்காக வங்கி கிளைகளில் விண்ணப்பித்து வருகின்றனர். மேலும் காசோலை புத்தகம் இல்லாத வாடிக்கையாளர்களும் புதிதாக காசோலை புத்தகம் கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் முன்பெல்லாம் காசோலை புத்தகம் கேட்டு விண்ணப்பிக்கும்போது 4 முதல் 7 நாட்களுக்குள் காசோலை புத்தகம் வாடிக்கையாளரின் வீட்டிற்கு வந்துவிடும். ஆனால் தற்போது ஒருசில வங்கிகளைத் தவிர பெரும்பாலான வழங்கிகளின் காசோலைகள் வந்து சேர 10 முதல் 20 நாட்கள் வரை ஆவதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
வாடிக்கையாளர்கள் கோரிக்கை
காசோலை புத்தகம் பெற காலதாமதம் ஆவதால், சில வாடிக்கையாளர்கள் வங்கிகளில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து பணத்தை பெற வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே தாமதமின்றி காசோலை புத்தகங்களை பெற வங்கிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.