பொறையாறு அருகே பயங்கரம்: ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை 2 பேர் கைது
பொறையாறு அருகே தகராறை தட்டிக் கேட்ட ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் 2 பேரை கைது செய்தனர். அடித்துக் கொலை நாகை மாவட்டம், பொறையாறு அருகே காலமநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் சுரேஷ் (வயது 35), ஆட்டோ டிரைவர். இ
பொறையாறு,
பொறையாறு அருகே தகராறை தட்டிக் கேட்ட ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
அடித்துக் கொலைநாகை மாவட்டம், பொறையாறு அருகே காலமநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் சுரேஷ் (வயது 35), ஆட்டோ டிரைவர். இவரது வீட்டின் அருகே நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன், ஆனந்தன், சக்திவேல், அய்யப்பனின் தம்பி பூவேந்தன் ஆகிய 4 பேரும் ஏதோ காரணத்திற்காக தகராறில் ஈடுபட்டனர். இதைக்கண்ட ஆட்டோ டிரைவர் சுரேஷ், ஏன் தெருவில் நின்று கொண்டு சத்தம் போடுகிறீர்கள்? என்று அவர்களை தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அய்யப்பன், கீழே கிடந்த உருட்டு கட்டையை எடுத்து சுரேசை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த சுரேஷ் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். உடனே 4 பேரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டனர். இதைத்தொடர்ந்து பலத்த காயம் அடைந்த சுரேசை அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர், சுரேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.
2 பேர் கைதுஇதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேல் மற்றும் போலீசார், சுரேஷ் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக சுரேஷ் மனைவி சித்ரா கொடுத்த புகாரின் பேரில் பொறையாறு போலீசார், அய்யப்பன், ஆனந்தன், பூவேந்தன், சக்திவேல் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் அய்யப்பன் (35), ஆனந்தன் (32) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், வழக்கு தொடர்பாக தப்பி ஓடிய பூவேந்தன், சக்திவேல் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். ஆட்டோ டிரைவர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பொறையாறு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.