300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ‘புலிக்குத்திக்கல்’ கோவை அருகே கண்டுபிடிப்பு வரலாற்று சின்னத்தை பாதுகாக்க கிராம மக்கள் கோவில் கட்டுகிறார்கள்
கோவை அருகே 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புலிக்குத்திக்கல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அந்த வரலாற்று சின்னத்தை பாதுகாக்க கிராம மக்கள் கோவில் கட்டுகிறார்கள். புலிக்குத்திக்கல் கண்டுபிடிப்பு வீர ராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்
கோவை
கோவை அருகே 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புலிக்குத்திக்கல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அந்த வரலாற்று சின்னத்தை பாதுகாக்க கிராம மக்கள் கோவில் கட்டுகிறார்கள்.
புலிக்குத்திக்கல் கண்டுபிடிப்புவீர ராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த செ.வெள்ளியங்கிரி, க.பொன்னுச்சாமி, ர.செந்தில்குமார், ச.ரஞ்சித் மற்றும் பொறியாளர் சு.ரவிக்குமார் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் திருப்பூர் – கோவை மாவட்ட எல்லையில், தமிழ் இலக்கியங்களில் தென்சேரி மலை எனப்போற்றப்படும் செஞ்சேரிமலை அருகில் உள்ள எஸ்.குமாரபாளையத்தில் தமிழ் எழுத்துக்களுடன் கூடிய புலிக்குத்திக்கல் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து ஆய்வு மையத்தின் இயக்குனர் பொறியாளர் சு.ரவிக்குமார் கூறியதாவது:– பண்டைய காலத்தில் பிற செல்வங்களை விட கால்நடைச் செல்வமே பெரும் செல்வமாகக் கருதப்பட்டது. “மாடு“ என்ற சொல் செல்வம் என்ற பொருளில் உலகப் பொதுமறையாம் திருக்குறளில் கையாளப்பட்டுள்ளது. பழைய மற்றும் நுண்கற்காலம் வரை நிலையாக ஓர் இடத்தில் தங்காமல் நாடோடி வாழ்க்கை முறையினை மேற்கொண்ட பண்டைய தமிழ்ச் சமூகம், புதிய கற்காலத்தில் (கி.மு.3000) தமது இனக்குழுவுக்கு என குடியிருப்புப் பகுதிகளை ஏற்படுத்திக் கொண்டு நிலையாக ஓரிடத்தில் வாழ தொடங்கினர்.
இக்காலத்தில்தான் அவர்கள் வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டனர். மாடு, எருமை, ஆடு, கோழி ஆகியவற்றை வளர்த்தனர். கால்நடைகளைப் பண்ட மாற்றுப் பொருளாகப் பயன்படுத்தி தன்னுடைய தேவைகளை நிறைவேற்றினர். “சாவா மூவாப் பேராடு“ என்னும் கல்வெட்டு இதை மெய்ப்பிக்கிறது. தனிமனிதனுடைய சொத்தாக மட்டுமே அல்லாமல், அவை நாட்டிற்குரிய பொதுச்சொத்தாகவும் பாதுகாக்கப்பட்டன. கிராமத்தலைவர்கள், தங்கள் கிராமத்திற்குரிய கால்நடைகளைப் பாதுகாக்கும் கடமையை மேற்கொண்டிருந்தனர் என்பதனைச் சிந்தாமணிக் காப்பியம் காட்டுகிறது. இவ்வாறு தங்கள் அழியாச் சொத்தாக விளங்கும் கால்நடைச் செல்வங்களைக் கொன்று தனக்கு உணவாக உட்கொள்ள வரும் புலிகளுடன் சண்டையிட்டு, வீரமரணம் அடைந்த வீரனின் நினைவாக,வீரத்தின் அடையாளமாக எடுக்கப்பட்ட நடுகற்கள் “புலிக்குத்திக்கற்கள்“ என்று அழைக்கப்படுகின்றன.
17–ம் நூற்றாண்டை சேர்ந்ததுகோவை அருகே கிடைத்துள்ள நடுகல் 110 சென்டி மீட்டர் உயரமும், 75 சென்டி மீட்டர் அகலமும் கொண்டதாகும். இதன் கீழ்ப்பகுதியில் தமிழில் மூன்று வரிகளைக் கொண்ட செய்தி உள்ளது. அதில் புலிகுத்தி பொடாறப்ப கவுண்டன் என்று உள்ளது. அதாவது பொடாறப்பகவுண்டர் என்பவர் புலியைக் குத்தி வீரமரணம் அடைந்த செய்தியை இது தெரிவிக்கிறது. இந்த நடுகல்லில் வீரனின் தலை நேராக உள்ளது. வீரன் வலது கையில் உள்ள வாளால் புலியின் வயிற்றுப் பகுதியைக் குத்தும் நிலையிலும் இடது கையை மடக்கிப் பாயும் புலியைத் தடுக்கும் நிலையிலும் அமைத்து உள்ளனர்.
வீரன் கை மற்றும் கால் பகுதிகளில் வீரக்காப்புமும், மார்புப் பகுதியில் அணிகலன்களும், இடையில் நல்ல வேலைப்பாடுடன் கூடிய ஆடையும் அணிந்துள்ளார். புலியின் முன்னங்கால் இரண்டும் எழுந்த நிலையில் வீரனைத்தாக்கும் வகையிலும், பின்னங்கால் இரண்டும் நிலத்தில் உள்ளபடியும் அமைத்துள்ளனர். எழுத்து அமைப்பை வைத்துப் பார்க்கும் போது இந்நடுகல் கி.பி.17–ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். அதாவது 300 ஆண்டுகளுக்கு முந்தையது இந்த நடுகல் ஆகும்.
கோவில் கட்டும் பணிஇந்த நடுகல்லின் சிறப்பையும், முக்கியத்துவத்தையும் கிராம மக்களுக்கு எடுத்துக்கூறி நடுகல்லைப் பாதுகாக்க வேண்டும் என்று விளக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கிராம மக்கள் வரலாற்று சின்னத்தை பாதுகாக்க இந்த நடுக்கல்லுக்கு கோவில் கட்டி வருகிறார்கள். இதே போன்று ஒவ்வொரு பகுதி மக்களும் தாம் வாழும் பகுதியில் உள்ள வரலாற்று மற்றும் தொல்லியல் சின்னங்களைப் பாதுகாத்தால் நமது பண்டைய வரலாறு அழிவிலிருந்து மீட்கப்படும், இந்த வீரக்கல்லுக்குக் கோவில் அமைத்துப் பாதுகாத்த கிராம மக்கள் பாராட்டுக்குரியவர்கள்.
இவ்வாறு ரவிக்குமார் கூறினார்.