பருவநிலை மாற்றத்தால் சிகிச்சை பெற வருவோர் அதிகரிப்பு: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஒரு படுக்கையில் 2 நோயாளிகள்

பருவநிலை மாற்றத்தால் சிகிச்சை பெற வருவோர் அதிகரித்ததால், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஒரு படுக்கையில் 2 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதை தவிர்க்க பூட்டி கிடக்கும் புதிய கட்டிடங்கள் திறக்கப்படுமா? என்பது நோயாளிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. நோய

Update: 2016-12-25 22:15 GMT

திண்டுக்கல்

பருவநிலை மாற்றத்தால் சிகிச்சை பெற வருவோர் அதிகரித்ததால், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஒரு படுக்கையில் 2 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதை தவிர்க்க பூட்டி கிடக்கும் புதிய கட்டிடங்கள் திறக்கப்படுமா? என்பது நோயாளிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நோயாளிகள் அதிகம்

திண்டுக்கல் மாவட்டத்தின் தலைநகரான திண்டுக்கல்லில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள், சிகிச்சைக்காக இங்கு வருகின்றனர். அதேபோல் பிற பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து மேல்சிகிச்சைக்காக, நோயாளிகள் இங்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இதனால் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் காலியாக இருக்காது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பகலில் கடுமையான வெயிலும், இரவில் கடுங்குளிரும் நிலவி வருகிறது. இந்த மாறுபட்ட பருவநிலையால் பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி உள்பட பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக இருமடங்காக அதிகரித்துள்ளது.

ஒரு படுக்கையில் 2 பேர்

விபத்தில் காயம் அடைந்தவர்கள், தற்கொலை முயற்சி, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்கு வருவோரை தவிர்த்து பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. ஒட்டு மொத்தமாக தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.

இதனால் டாக்டரிடம் மருத்துவ பரிசோதனை செய்யும் இடம், எக்ஸ்ரே, ஸ்கேன், ரத்த பரிசோதனை, மருந்துகள் வாங்கும் இடம் ஆகியவற்றில் எப்போதும் நீண்ட வரிசையில் நோயாளிகள் நிற்பதை காணலாம். அதேபோல் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுவோரும் அதிகரித்து விட்டனர்.

இதன் விளைவாக மருத்துவமனையில் இருக்கும் படுக்கைகளின் எண்ணிக்கையை விட உள்நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. இதனால் வேறு வழியில்லாமல், ஒரு படுக்கையில் 2 நோயாளிகளை அனுமதிக்கும் தர்மசங்கடமான நிலைக்கு மருத்துவமனை ஊழியர்கள் தள்ளப்பட்டனர். அதன்படி பெண் வார்டில் நேற்று ஒரு படுக்கையில் 2 பேர் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

புதிய கட்டிடம்

அதேநேரம் மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் படுக்கை வசதிகளுடன் கூடிய பிரமாண்டமாக கட்டப்பட்ட புதிய கட்டிடம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. அந்த கட்டிடம் திறக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்தால், தற்போதைய பரிதாப சூழல் ஏற்பட்டு இருக்காது என நோயாளிகள் வேதனையுடன் தெரிவித்தனர். புதிய கட்டிடங்களை விரைவில் திறந்து செயல்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகமும், மருத்துவத்துறையும் நடவடிக்கை எடுக்குமா? என்பது நோயாளிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்