ஓட்டல் வேலைக்கு சென்ற இடத்தில் சித்ரவதை: மலேசியாவில் தவிக்கும் தேனி வாலிபர்கள் மீட்கக்கோரி பெற்றோர்கள் மனு

மலேசியாவுக்கு ஓட்டல் வேலைக்கு சென்ற தேனி வாலிபர்கள் 6 பேர் அங்கு சித்ரவதை அனுபவிப்பதாகவும், அவர்களை மீட்க வேண்டும் என்றும் அவர்களின் பெற்றோர்கள் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர். தேனி வாலிபர்கள் தேனி மாவட்டம், கண்டமனூர் அருகே உ

Update: 2016-12-25 22:00 GMT

தேனி,

மலேசியாவுக்கு ஓட்டல் வேலைக்கு சென்ற தேனி வாலிபர்கள் 6 பேர் அங்கு சித்ரவதை அனுபவிப்பதாகவும், அவர்களை மீட்க வேண்டும் என்றும் அவர்களின் பெற்றோர்கள் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தேனி வாலிபர்கள்

தேனி மாவட்டம், கண்டமனூர் அருகே உள்ள கோவிந்தநகரத்தைச் சேர்ந்த முருகன் மகன் ஆனந்த் (வயது 20), சுப்பையா மகன் ராமன்(24), வேலுச்சாமி மகன் குமரவடிவேலன்(26), சீனிவாசன் மகன்கள் ஜானகிராமன்(26), கோதண்டராமன்(25), சீத்தாராமன்(23) ஆகிய 6 பேரும் தேனியில் கேட்டரிங் படித்தனர். இவர்கள் படிப்பு முடித்து வேலை தேடிக் கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில் சென்னையை சேர்ந்த ஏஜெண்டு ஒருவர் மூலம் இந்த வாலிபர்கள் 6 பேரும் கடந்த செப்டம்பர் மாதம் மலேசியாவில் தங்கமூவன் என்ற இடத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்காக அந்த ஏஜெண்டிடம் 6 பேரும் தலா ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வீதம் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் இவர்கள் தங்களின் பெற்றோருக்கு சம்பளம் பணம் அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு இவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் போனதாக கூறப்படுகிறது.

மலேசியாவில் சித்ரவதை

இந்த நிலையில், மலேசியாவில் வேலை செய்து வரும் ஒருவர் மூலம் ஆனந்த் உள்ளிட்ட 6 பேரும் கடும் பணிச்சுமை மற்றும் கெடுபிடியில் சிக்கித் தவித்து வருவதாகவும், அங்கு அவர்கள் சித்ரவதை செய்யப்படுவதாகவும் ஆனந்தின் தந்தை முருகனுக்கு செல்போன் வழியாக தகவல் கிடைத்தது. இதையடுத்து 6 பேரின் பெற்றோர்களும் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று முன்தினம் தனித்தனியாக புகார் மனு அளித்தனர்.

அதில் தங்களின் மகன் மலேசியாவில் சிக்கித் தவிப்பதால், அவர்களை மீட்டு கொண்டு வர வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தனர். இந்த மனுக்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி துரித நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தெரிவித்தார். தொடர்ந்து இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்களை மலேசியாவுக்கு அனுப்பி வைத்த ஏஜெண்டு எங்கே இருக்கிறார்? மலேசியாவில் உள்ள வாலிபர்கள் 6 பேரும் என்ன நிலையில் இருக்கிறார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்