நீர் நிலைகளை மேம்படுத்திட ரூ.10¼ கோடி மதிப்பில் ஏரிகள் தூர் வாரும் பணி அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்

நீர் நிலைகளை மேம்படுத்திட ரூ.10¼ கோடி மதிப்பில் ஏரிகள் தூர்வாரும் பணியை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார். நிலத்தடி நீர் தர்மபுரி மாவட்டத்தில் நீர் நிலைகளை மேம்படுத்திட மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியா

Update: 2016-12-25 22:45 GMT

தர்மபுரி,

நீர் நிலைகளை மேம்படுத்திட ரூ.10¼ கோடி மதிப்பில் ஏரிகள் தூர்வாரும் பணியை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.

நிலத்தடி நீர்

தர்மபுரி மாவட்டத்தில் நீர் நிலைகளை மேம்படுத்திட மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பொது பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கன்மாய்களில் 150 கிலோ மீட்டர் தூரம் தூர் வாரப்பட்டுள்ளது. மேலும் ஊரக வளர்ச்சி துறை மூலமும் தொடர்ந்து கன்மாய்கள் தூர் வாரப்பட்டு வருகிறது. நீர் ஆதாரம் இல்லாததால் கைவிடப்பட்டு பயன்பாட்டில் இல்லாமல் இருந்த 129 ஆழ்துளை கிணறுகள் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஏரிகள் மற்றும் கன்மாய்களில் நிறைந்துள்ள சீமைகருவேல மரங்களை அகற்ற வனத்துறையின் மூலம் மதிப்பீடு பெறப்பட்டு பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை சார்பில் அதனை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பொது பணித்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தாமரை ஏரி, புலிக்கல் ஏரி, கிருஷ்ணாபுரம் சின்ன ஏரி, பெரிய ஏரி, சோகத்தூர் ஏரி, அன்னசாகரம் ஏரி மற்றும் சாமனூர் சாலி ஏரி, பொன்னேரி ஏரி ஆகிய ஏரிகளில் உள்ள கருவேல மரங்களை அகற்றும் பணி மற்றும் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

அமைச்சர் தொடங்கி வைத்தார்

மேலும் 2016–17–ம் ஆண்டு தாய்த்திட்டத்தின் கீழ் நீர்நிலைகளை மேம்படுத்திட 45 ஏரிகள் ரூ.10 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் தூர் வாரி சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட உள்ளது. மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த பணிகளை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்து பணிகளை பார்வையிட்டார். அன்னசாகரம், கிருஷ்ணாபுரம் ஏரிகளை பார்வையிட்ட அவர் இந்த பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் விவேகானந்தன், பி.பழனியப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், உதவி கலெக்டர் ராமமூர்த்தி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம், முன்னாள் பால்வளத்தலைவர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் உள்ளனர்.

மேலும் செய்திகள்