என்ஜினீயரிங் கல்லூரி மாணவியை கிண்டல் செய்ததால் ஏற்பட்ட தகராறில் 6 பேர் கைது 30 பேருக்கு போலீசார் வலைவீச்சு

என்ஜினீயரிங் கல்லூரி மாணவியை கிண்டல் செய்ததால் ஏற்பட்ட தகராறில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். 30 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். ஜாதி பெயரை கூறி கிண்டல் தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஆவணம் அக்னி பஜார் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்.

Update: 2016-12-25 22:45 GMT

திருச்சிற்றம்பலம்,

என்ஜினீயரிங் கல்லூரி மாணவியை கிண்டல் செய்ததால் ஏற்பட்ட தகராறில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். 30 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஜாதி பெயரை கூறி கிண்டல்

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஆவணம் அக்னி பஜார் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகள் ராணி (வயது 22). (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 3–ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் ஆவணத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்று விட்டு பள்ளி வாசல் தெரு வழியாக வீட்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 2 பேர் ராணியை ஜாதி பெயரை சொல்லி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வீட்டிற்கு சென்றதும் ராணி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் ஏற்பட்ட தகராறில் ராணியின் உறவினர்கள் பிடிபட்ட 2 பேரையும் தாக்கினர்.

6 பேர் கைது

இதுதொடர்பாக ராணி கொடுத்த புகாரின் பேரில் திருச்சிற்றம்பலம் போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஆவணம் கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் (22) என்பவரை கைது செய்தனர். அவருடைய நண்பர் முகமது இப்ராம் என்பவரை தேடி வருகிறார்கள்.

மேலும், தனது மகன் ஜெயராமனை தாக்கியதாக அவருடைய தாய் கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில், ஆவணம் கிராமத்தை சேர்ந்த ராஜா (30), வேம்பரசன் (21), ரவிக்குமார் (29), கவுதமன்(20), 18 வயதுடைய வாலிபர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக 30 பேரை திருச்சிற்றம்பலம் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் இரு தரப்பினரிடையே மீண்டும் பிரச்சினைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க, பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த்மேனன் நேரடி பார்வையில் திருச்சிற்றம்பலம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்