அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற மாணவ–மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும் விடுதி காப்பாளர்களுக்கு கலெக்டர் அண்ணாதுரை அறிவுரை

அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற மாணவ–மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும் என்று விடுதி காப்பாளர்களுக்கு கலெக்டர் அண்ணாதுரை அறிவுரை வழங்கினார். ஆய்வு கூட்டம் தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும்

Update: 2016-12-25 22:45 GMT

தஞ்சாவூர்,

அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற மாணவ–மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும் என்று விடுதி காப்பாளர்களுக்கு கலெக்டர் அண்ணாதுரை அறிவுரை வழங்கினார்.

ஆய்வு கூட்டம்

தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் மாணவ–மாணவிகள் விடுதிகளின் காப்பாளர்கள் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

விடுதியில் தங்கி படிக்கும் 10–ம் வகுப்பு, பிளஸ்–2 மாணவ, மாணவிகள் கல்வி தரத்தில் சிறந்து விளங்கி, அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற விடுதி காப்பாளர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும். மாணவ–மாணவிகளுக்கு மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தி, அவர்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்தி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். மாணவ–மாணவிகள் எப்படி படிக்கின்றனர் என பள்ளி ஆசிரியர்களை தொடர்பு கொண்டு கண்காணிப்பு பணியை காப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டும். தரமான உணவு வகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தோட்டம்

பெரும்பாலான விடுதிகளில் பயன்பாட்டிற்கு போக காலியாக உள்ள இடங்களில் தோட்டம் அமைத்து இயற்கையான சூழலை ஏற்படுத்த வேண்டும். விடுதியில் தங்கி பயிலும் மாணவ–மாணவிகள் யாராவது நீண்டகாலம் வராமல் இருந்தாலும், படிப்பை விட்டு இடையில் நின்றாலும் உடனடியாக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விடுதியில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவ–மாணவிகள் தமிழ்நாடு அரசு தேர்வாணயத்தால் நடத்தப்படும் போட்டி தேர்வுகள் எழுதுவதற்கு ஏதுவாக சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மணி, விடுதி காப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்