வேப்பூர் அருகே மின்வேலியில் சிக்கி வாலிபர் பலி எலந்தப்பழம் பறிப்பதற்காக நண்பருடன் சென்றபோது பரிதாபம்

வேப்பூர் அருகே மின்வேலியில் சிக்கி வாலிபர் பலியானார். எலந்தப்பழம் பறிப்பதற்காக நண்பருடன் சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. எலந்தப்பழம் பறிப்பதற்காக... வேப்பூர் அருகே உள்ள களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். விவசாயி. இவரது மகன் வினித்(வ

Update: 2016-12-25 22:45 GMT

வேப்பூர்,

வேப்பூர் அருகே மின்வேலியில் சிக்கி வாலிபர் பலியானார். எலந்தப்பழம் பறிப்பதற்காக நண்பருடன் சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

எலந்தப்பழம் பறிப்பதற்காக...

வேப்பூர் அருகே உள்ள களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். விவசாயி. இவரது மகன் வினித்(வயது 21). இவரும், அதே கிராமத்தை சேர்ந்த நவநீதகிருஷ்ணன்(17) என்பவரும் நண்பர்கள். நவநீதகிருஷ்ணன் அடரி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார்.

பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் நவநீதகிருஷ்ணனும், வினித்தும் நேற்று காலை களத்தூர் கிராமத்தை ஒட்டியுள்ள காப்புக்காட்டில் எலந்தப்பழம் பறிப்பதற்காக புறப்பட்டனர்.

மின்வேலியில் சிக்கி பலி

பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த செல்வராசு(55) என்பவருடைய கரும்பு தோட்டத்தை கடந்து செல்ல முற்பட்டனர். அப்போது அந்த வயலில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் வினித் சிக்கினார். இதில் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

தன் நண்பர் கண்முன்னே மின்வேலியில் சிக்கி பலியானதை பார்த்து நவநீதகிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்தார். வினித்தை மீட்க முடியாமல் தவித்தார். இதற்கிடையில் அந்த வழியாக செல்வராசு வந்தார். மின்வேலியில் சிக்கி வினித் இறந்ததை பார்த்ததும், உடனடியாக அவர் மின் இணைப்பை துண்டித்தார்.

போலீசார் விசாரணை

இது பற்றி தகவல் அறிந்ததும் வினித்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வினித்தின் உடலை பார்த்து கதறி அழுதனர். அங்கு அந்த கிராமத்தை சேர்ந்த 100–க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.

இது குறித்த தகவலின் பேரில் வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வினித்தின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், வனவிலங்குகள் புகுந்து கரும்புகளை சேதப்படுத்தாமல் இருக்க தோட்டத்தை சுற்றிலும் செல்வராசு மின்வேலி அமைத்துருப்பதும், இதைஅறியாமல் அங்கு சென்ற வினித் மின்வேலியில் சிக்கி பலியாகி இருப்பதும் தெரியவந்தது.

விவசாயி கைது

இதையடுத்து வினித்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுமதியின்றி முறைகேடாக தனது தோட்டத்தில் மின்வேலி அமைத்ததாக செல்வராசுவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்