உலகிலே பெரிய கோவில்!

உலகிலேயே மிகப் பெரிய இந்துக் கோவிலை அமைப்பதற்கான ஆரம்பகட்டப் பணிகள் பீகார் மாநிலத்தில் தொடங்கியுள்ளன. பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 150 கி.மீ. தொலைவில், மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள கேசரியா அருகே ஜானகி நகரில் 165 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாய்

Update: 2016-12-25 10:03 GMT
லகிலேயே மிகப் பெரிய இந்துக் கோவிலை அமைப்பதற்கான ஆரம்பகட்டப் பணிகள் பீகார் மாநிலத்தில் தொடங்கியுள்ளன. பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 150 கி.மீ. தொலைவில், மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள கேசரியா அருகே ஜானகி நகரில் 165 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாய் எழவிருக்கிறது இக்கோவில். முதல்கட்டப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை மட்டும் ரூ. 200 கோடி.

இக்கோவிலை கட்டுவதற்கான தடைகள் அகன்றுவிட்டதாகவும், பிறக்கும் புதிய ஆண்டில் இக்கோவில் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் தொடங்கும் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.

‘விராட் ராமாயண் மந்திர்’ என்ற இக்கோவிலுக்கான அசல் திட்டம், கம்போடிய அரசாங்கத்தின் எதிர்ப்பால் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கோவிலின் மாதிரி வரைபடம், தங்கள் நாட்டின் புகழ்பெற்ற அங்கோர் வாட் கோவிலை ஒத்திருப்பதாகக் கூறி எதிர்ப்புத் தெரிவித்தது கம்போடியா.

மன்னர் சூரியவர்மன் காலத்தில் கட்டப்பட்ட அங்கோர் வாட் கோவில், ‘யுனெஸ்கோ’வால் உலக பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கு ஆண்டு தோறும் உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வந்து குவிகிறார்கள்.

பீகாரில் அமையும் கோவிலின் அமைப்பு மாற்றி அமைக்கப் பட்டுவிட்டதால் இனி பிரச்சினையில்லை என்கிறார், கோவில் கட்டுமானப் பணியை மேற்கொள்ளும் மகாவீர் மந்திர் டிரஸ்ட்டின் ஆச்சாரிய கிஷோர் குணால்.

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான இவர், பீகார் கோவில் கட்டுமானத்தின் பிரதான புள்ளியாக உள்ளார்.

இந்தக் கோவில் வளாகத்தில் மொத்தம் 18 கோவில்கள் இருக்கும் என்றும், அவற்றில் ராமாயண மந்திர், சிவன் கோவில், மகாவீர் கோவில் ஆகியவை பிரதானமாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இக்கோவிலுக்கு வரும் மக்களை எடுத்தவுடனே ஈர்க்கும் பிரதான அம்சமாக இதன் எண்கோண வடிவ, 405 அடி உயர கோபுரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அங்கோர் வாட் கோவில் கோபுரத்தின் அதிகபட்ச உயரம் 215 அடிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

பீகார் கோவிலின் மற்ற முக்கிய அம்சங்களில் 44 அடி உயரம் 33 அடி சுற்றளவு கொண்ட லிங்கமும் ஒன்று. இது உருவாகும்போது, உலகிலேயே மிகப் பெரிய லிங்கமாக இருக்கும்.

இக்கோவிலின் கட்டுமானப் பணி கடந்த 2015–ம் ஆண்டே தொடங்கியிருக்க வேண்டியது. ஆனால் கம்போடியாவின் எதிர்ப்பால்தான் அது தள்ளிப்போனது.

புதிய மாதிரி வரைபடத்தை கம்போடியாவுக்கு அனுப்பி, அதற்கு அந்நாட்டு அரசு எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காததால் தற்போது பணிகள் சூடுபிடித்திருக்கின்றன.

புதிய கோவிலின் அமைப்பில், இந்தியா, தாய்லாந்து, இந்தோனேசியாவில் உள்ள புகழ்பெற்ற கோவில்களின் தாக்கம் இருக்கும் என்று கூறுகிறார்கள்.

மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம், இந்தக் கோவில் கட்டுமானப் பணிக்காக இஸ்லாமியர்கள் பலர் தங்களின் நிலங்களை குறைந்த விலைக்குக் கொடுத்திருக்கிறார்களாம்.

‘‘இஸ்லாமியப் பெருமக்கள் மட்டும் உதவி செய்திராவிட்டால், இந்தக் கோவில் கட்டுமானப் பணிக்கான முதல் அடியை எடுத்து வைத்திருப்பதே கஷ்டம்’’ என்கிறார், ஆச்சாரிய கிஷோர் குணால்.

பிரபல கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டியால் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்படவிருக்கும் இக்கோவிலில், பிரதான கோவிலில் ராமர், சீதை,  அவர்களின் புதல்வர்கள் லவன், குசன் ஆகியோரின் சிலைகள் இடம்பெறுமாம்.

இக்கோவிலில் அமையும் பிரதான ஹாலில் ஒரே நேரத்தில் 20 ஆயிரம் பேர் அமர முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய கோவில் உருவானதும், அது ஆன்மிக யாத்ரீகர்களின் பயணத் திட்டத்தில் முக்கிய இடம்பிடிக்கும் என்று கருதலாம்.

மேலும் செய்திகள்