உலகின் முதல் காவியம்

காவியம் என்பது ஒரு நாட்டின் புனிதமாக கருதப்படுகிறது. நமது நாட்டில் உள்ள மகாபாரதம், ராமாயணம் போல் உலகின் ஒவ்வொரு நாகரிகங்களிலும் ஒரு காவியம் இருக்கிறது. அந்த காவியங்கள் பெரும்பாலும் புனிதமானவையாக கருதப்படுகின்றன. இப்படிப்பட்ட காவியங்கள்

Update: 2016-12-25 07:35 GMT
காவியம் என்பது ஒரு நாட்டின் புனிதமாக கருதப்படுகிறது. நமது நாட்டில் உள்ள மகாபாரதம், ராமாயணம் போல் உலகின் ஒவ்வொரு நாகரிகங்களிலும் ஒரு காவியம் இருக்கிறது. அந்த காவியங்கள் பெரும்பாலும் புனிதமானவையாக கருதப்படுகின்றன. இப்படிப்பட்ட காவியங்கள் எல்லாவற்றுக்கும் முன்னோடியாகவும், முதன் முதல் எழுதப்பட்டதாகவும் இருப்பது ‘கில்கேமேஷ்‘ என்ற காவியம்தான்.  இது 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிஜக்கதை என்கிறார்கள். ஆனால், அதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.

காவியத்தின் கதை இதுதான். ‘யூப்ரடிஸ்‘ நதிக்கரையில் அமைந்த ‘ஊருக்‘ என்ற தேசத்தை கில்கேமேஷ் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு சர்வாதிகாரி போல் கொடூர ஆட்சி செய்தான். நிறைய பெண்களோடு சல்லாபிப்பதும், ஆண்களுக்கு ஏகப்பட்ட வேலையை கொடுப்பதுமாக இருந்தான். இந்த கொடுமைகளை தாங்கமுடியாத நாட்டு மக்கள் தங்கள் எல்லை தெய்வமான ‘அனு‘விடம் முறையிடுகிறார்கள். அனு படைப்புக்கடவுளான ஆரூருக்கிடம் சொல்ல, பெண் தெய்வமான ‘ஆரூருக்‘ களிமண்ணை குலைத்து ஒரு புதிய மனிதனை உருவாக்குகிறார். வீரமும் கம்பீரமும் நிறைந்த அந்த மனிதனுக்கு ‘எங்கிடு‘ என்று பெயரிடுகிறார்.

பெண் தெய்வம் எங்கிடுவிடம், “கில்கேமேஷ் உடன் போரிட்டு அவனின் கொட்டத்தை அடக்கி நாட்டு மக்களைக் காப்பாற்று..“ என்று கட்டளையிடுகிறது. புனிதனாக படைக்கப்பட்ட எங்கிடு பாபிலோனியா புறப்படுகிறான். காட்டில் வாழும் வனவிலங்குகளை எல்லாம் தோழமை கொள்கிறான். யாரும் விலங்குகளை வேட்டையாடி அழித்துவிடாமல் பாதுகாக்கிறான். இந்த விஷயம் மன்னன் கில்கேமேஷ்க்கு போகிறது. கோபம் கொந்தளிக்க படையோடு புறப்படுகிறான். மன்னனை தடுத்த சாமியார்கள் எங்கிடு பற்றிய உண்மைகளை விளக்கி, அவனிடம் தெய்வீக சக்தி இருப்பதாகவும், அவனை சாதாரணமாக வெல்ல முடியாது என்றும் சொல்கிறார்கள். அவனை வெல்ல வேண்டுமென்றால் முதலில் அவனிடம் இருக்கும் தெய்வீக சக்தியை அழித்து அவனை சாதாரண மனிதனாக மாற்ற வேண்டும் என்கிறார்கள். அதற்கு அவன் ஒரு பெண்ணோடு உறவு கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

அதற்காக கோவிலில் நடனமாடும் பெண் ஒருத்தியை கில்கேமேஷ் காட்டுக்கு அனுப்பி வைக்கிறான். அந்தப் பெண் தனது கவர்ச்சியால் எங்கிடுவை மயக்குகிறாள். உணர்ச்சிவசப்பட்டு அந்தப் பெண்ணோடு எங்கிடு உறவு கொள்கிறான். உடனே அவனது தெய்வீக சக்தியெல்லாம் அவனை விட்டு விலகிவிடுகிறது.

மறுநாள் காலை கண்விழிக்கும்போது எதிரே கில்கேமேஷ் ஏளனப் புன்னகையோடு நின்று கொண்டிருக்கிறான். இருவரும் சண்டையிடுகிறார்கள். நாள்முழுவதும் யாரும் வெற்றி பெறவில்லை. களைத்துப்போனதுதான் மிச்சம். இறுதியில் இருவரும் நண்பர்களாக மாறுகின்றனர். இருவரும் ஒன்று சேர்ந்து பல சாகசங்களை செய்கிறார்கள்.

ஒருநாள் எங்கிடு இறந்து போகிறான். அதனை கண்டு வேதனையடைந்த கில்கேமேஷ் சாகாவரம் பெறவேண்டும் என்று துடிக்கிறான். பல தவங்களை செய்து எதுவும் முழுமை பெறாமல் தவித்து சோர்ந்து போகிறான். அப்போது கனிவும், கருணையும் கொண்ட பெண் தெய்வம் சிதூரி தோன்றி, “சாகாவரத்திற்கு ஆசைப்படாதே! இருக்கிற வாழ்க்கையை ரசிக்க கற்றுக்கொள்! நண்பர்களோடு உரையாடு. மனைவியோடு மகிழ்ச்சியாக இரு! மரணம் வருகிறபோது நேர்கொள்! அதுதான் சாத்தியம்! வாழ்வது முக்கியமல்ல. வாழ்க்கையில் நீ சாதிப்பதும், வருங்காலத்திற்கு நீ விட்டுப்போகிற நல்ல விஷயங்களும்தான் முக்கியம். நீண்ட காலம் வாழ்ந்து சாதாரண மனிதன் போல இறந்து போவாயாக..!“ என்று போதித்துவிட்டு மறைகிறது.

கில்கேமேஷ் மன அமைதி பெறுகிறான். மக்களுக்கு நன்மைகளை செய்கிறான். அவன் மரணம் அடையும் போது அவனைப்போன்ற ஒரு உத்தமமான மன்னன் இல்லை என்று சொல்லும் அளவிற்கு மக்களிடம் நற்பெயரை சம்பாதித்து வைக்கிறான். அவன் மரணம் அடையும்போது பாபிலோனிய சாம்ராஜ்யமே கண்ணீர் வடித்தது. பெண் கடவுளான சிதூரி கில்கேமேஷ்க்கு போதித்த அந்த வாழ்வியல் உண்மைகள்தான் இந்தக் காவியத்தை மிக உயர்ந்த நிலைக்கு மிகப் புனிதமாக உயர்த்தியது. நமது பகவத் கீதையில் கண்ணன் அர்ஜுணனுக்கு உபதேசிப்பது எப்படி புனிதமாக கருதப்படுகிறதோ அப்படியே சிதூரியின் போதனைகளும் பாபிலோனியாவில் கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்