பணமில்லா பரிவர்த்தனை மூலமே கருப்பு பணத்தை ஒழிப்பதுடன், ஊழலை தடுக்க முடியும் கவர்னர் கிரண்பெடி பேச்சு

பணமில்லா பரிவர்த்தனையின் மூலமே கருப்பு பணத்தை ஒழிப்பதுடன், ஊழலை தடுக்க முடியும் என்று கவர்னர் கிரண்பெடி கூறினார். கருத்தரங்கு புதுச்சேரி போலீஸ் பயிற்சி பள்ளியில் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பணமில்லா பரிவர்த்தனை மற்றும் இணையதள பரிமாற

Update: 2016-12-24 22:15 GMT

புதுச்சேரி

பணமில்லா பரிவர்த்தனையின் மூலமே கருப்பு பணத்தை ஒழிப்பதுடன், ஊழலை தடுக்க முடியும் என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.

கருத்தரங்கு

புதுச்சேரி போலீஸ் பயிற்சி பள்ளியில் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பணமில்லா பரிவர்த்தனை மற்றும் இணையதள பரிமாற்றம் குறித்த கருத்தரங்கு நேற்று காலை நடந்தது.

இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு கவர்னர் கிரண்பெடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

பணமில்லா பரிவர்த்தனை

பணமில்லா பரிவர்த்தனை மூலமே கருப்பு பணத்தை ஒழிப்பதுடன், ஊழலை தடுக்க முடியும். எனவே போலீசார் அனைவரும் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாற வேண்டும். மிகவும் அத்தியாவசியம் மற்றும் தேவைப்படும் இடத்தில் மட்டுமே பணத்தை பயன்படுத்த வேண்டும். மற்ற இடங்களில் இணையதளம் மற்றும் பண அட்டைகளை பயன்படுத்தியே பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த முறை காவலர் குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது கூறியதைப்போல் உடனடியாக காவலர் குடியிருப்போர் நலச்சங்கம் தொடங்க வேண்டும். இந்த சங்கத்தின் கூட்டத்தை மாதந்தோறும் 1–ம் தேதி நடத்த வேண்டும்.

அந்த வகையில் வருகிற 1–ந் தேதி நடத்தப்பட உள்ள சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் நான் பங்கேற்பேன். இந்த சங்கத்தின் மூலம் குடியிருப்பு பகுதியில் தூய்மைப்பணிகளை போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினரே சேர்ந்து செய்ய வேண்டும்.

இவ்வாறு கிரண்பெடி கூறினார்.

நிகழ்ச்சியில் போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன், போலீஸ் சூப்பிரண்டு கொண்டா வெங்கடேஸ்வர ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆய்வு செய்தார்

தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி போலீசாரின் உடற்பயிற்சிக்கூடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிககளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள யோகா பயிற்சி மையத்தில் சிறிது நேரம் யோகா பயிற்சி மேற்கொண்டார். பின்னர் காவலர் பயிற்சி பள்ளியில் மரக்கன்றுகள் நட்டார். இதன்பின் அவர் கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.

கவர்னர் கிரண்பெடி உத்தரவின் பேரில் போலீஸ் அதிகாரிகள், காவலர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளை நேற்று தேர்வு செய்தனர். இதில் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதமின் மனைவி கிரண் கவுதமை சங்கத்தின் கவுரவ தலைவியாகவும், கமாண்டண்ட் மகேஷ்குமார் பர்னாவின் மனைவி சுதா பர்னாவை சங்க தலைவியாகவும் தேர்வு செய்தனர். உதவி சப்–இன்ஸ்பெக்டர் சாந்தி செயலாளராகவும், உதவி சப்–இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி துணை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்