வளம் சார்ந்த வங்கிக்கடன் திட்ட அறிக்கையில் 88 சதவீதம் வேளாண்மைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது கலெக்டர் தகவல்

வளம் சார்ந்த வங்கிக்கடன் திட்ட அறிக்கையில் 88 சதவீதம் வேளாண்மைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் கூறினார். கடன்திட்ட அறிக்கை தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்டு வங்கி) சார்பில் அரியலூர் மாவட்டத்திற்கான 2017–18–ம் ஆண்டிற்க

Update: 2016-12-24 22:30 GMT

அரியலூர்,

வளம் சார்ந்த வங்கிக்கடன் திட்ட அறிக்கையில் 88 சதவீதம் வேளாண்மைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் கூறினார்.

கடன்திட்ட அறிக்கை

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்டு வங்கி) சார்பில் அரியலூர் மாவட்டத்திற்கான 2017–18–ம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியீட்டு விழா கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரூ.2 ஆயிரத்து 277 கோடி கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு கலெக்டர் சரவணவேல்ராஜ் பேசியதாவது:–

நபார்டு வங்கியின் 2017–18ம் ஆண்டிற்கான இந்த வளம் சார்ந்த கடன் திட்டமானது 2022–க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் என்ற நோக்கத்தை உடையது. அதாவது, விவசாயிகளை கால்நடை வளர்ப்புடன், உள்நாட்டு மீன்வளர்ப்பு, தேனீ வளர்ப்பு போன்ற தொழில்களிலும், விவசாயம் சாரா தொழில்களிலும் ஈடுபடுத்தி, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க செய்தல் என்கிற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.

வேளாண்துறைக்கு 88 சதவீதம்

மேலும் நபார்டின் வளம் சார்ந்த கடன் திட்டத்தில், பகுதி சார்ந்த திட்டங்களாக அரியலூர் மாவட்டத்தின் ஒன்றியங்களில் ஆடு வளர்ப்பிற்காக ரூ.3,513 லட்சங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறு குறு விவசாயிகளின் வருமானத்திற்கு உத்தரவாதம் கொடுக்கும், இந்த முக்கியமான செயல்பாடிற்காக மாவட்டத்தில் உள்ள சிறு குறு விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும். மொத்த வளம் சார்ந்த கடனாற்றல் மதிப்பீட்டான ரூ.2,277 கோடியில் 88 சதவீதம் வேளாண் துறைக்கும், 2 சதவீதம் சிறு குறு தொழில்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி கல்வி கடனுக்காகவும், வீட்டு கடனுக்காகவும், ஏற்றுமதி கடனுக்காகவும், தனித்தனியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், முன்னுரிமை கடன்களுக்கான வழிகாட்டி நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி சமீபத்தில் மாற்றி அமைத்துள்ளதாகவும், இதில் சிறு குறு விவசாயிகள் மற்றும் குறுந்தொழில்களுக்கு தனியாக இலக்கு வங்கிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக உதவிபொது மேலாளர் (ரிசர்வ் வங்கி) தியாகராஜன் தெரிவித்தார். நபார்டு வங்கியின் அரியலூர் மாவட்ட வளர்ச்சி மேலாளர் நவீன்குமார், இந்த அறிக்கையை பற்றி கூறும்போது, திட்ட அறிக்கை பல அரசு துறைகள், வங்கிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் புள்ளி விவரங்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளஞ்சேரன் மற்றும் வங்கியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்