முதுமலையில் பனி மூட்டம்: சாலையோரங்களில் சுற்றித்திரியும் வனவிலங்குகள்

முதுமலை வனப்பகுதியில் காலை நேரத்தில் பனிமூட்டம் காரணமாக சாலையோரங்களில் வன விலங்குகள் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பனி மூட்டம் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை

Update: 2016-12-24 22:00 GMT

மசினகுடி

முதுமலை வனப்பகுதியில் காலை நேரத்தில் பனிமூட்டம் காரணமாக சாலையோரங்களில் வன விலங்குகள் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பனி மூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை குளிர் காலம் ஆகும். இந்த காலத்தில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் உறைபனியும், பகலில் கடும் வெயிலும் இருக்கும். குறிப்பாக குளிரின் தாக்கம் ஊட்டியில் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக மசினகுடி, முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளிலும் பனிமூட்டம் காணப்படும்.

இந்த நிலையில் தற்போது ஊட்டி மட்டுமின்றி மசினகுடி, முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி உள்பட அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடுங்குளிர் நிலவி வருகிறது. அதிகாலை நேரங்களில் வனப்பகுதியில் உள்ள புற்களின் மீது பனித்துளிகள் படர்ந்து காணப்படுகிறது. மேலும் கடும் பனி மூட்டமும் வனப்பகுதியை சூழ்ந்துவிடுகிறது.

எச்சரிக்கை

பனிமூட்டத்தால் எதிரில் நிற்கும் வனவிலங்குகளை கூட பார்க்க முடிவதில்லை. அதிகாலை நேரத்தில் உருவாகும் பனிமூட்டம் காலை 9 மணி வரை நீடிக்கிறது. இதன் காரணமாக மான்கள், காட்டு யானைகள், காட்டெருமைகள் போன்ற வனவிலங்குகள் சாலையோரங்களில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதே போல பகல் நேரங்களில் வெயிலின் தாக்கமும் அதிகமாக உள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள புற்கள், செடி, கொடிகள் காய்ந்து வருகின்றன. இதன் காரணமாக வன விலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

கவனமுடன் செல்ல வேண்டும்

இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:–

முதுமலை வனப்பகுதியில் அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் நிலவுவதால் சாலையோரங்களில் வன விலங்குகள் சுற்றித்திரிகின்றன. இதனால் சாலையில் செல்பவர்களை வன விலங்குகள் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் மிகவும் கவனமுடன் செல்ல வேண்டும். எனினும் காலை நேரத்தில் முதுமலை வனப்பகுதி வழியாக செல்லும் சாலைகளில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இது தொடர்பாக சுற்றுலா பயணிகள் கூறும் போது, காலை நேரத்தில் தெப்பக்காட்டில் இருந்து வனத்துறையினர் மூலம் நடத்தப்படும் வாகன சவாரி மற்றும் யானை சவாரி சென்றால் பனி மூட்டம் காரணமாக வன விலங்குகளை காணமுடிவது இல்லை. காட்டுக்குள் வன விலங்குகளை காண முடியாமல் ஏமாற்றத்துடன் தான் திரும்ப வேண்டியது உள்ளது என்று கூறினார்கள்.

மேலும் செய்திகள்