சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்ட திண்டுக்கல் தொழில் அதிபர் ரத்தினம் வீடு–அலுவலகத்தில் வருமானவரி சோதனை 10½ மணிநேரம் நடந்தது

சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்ட திண்டுக்கல் தொழில் அதிபர் ரத்தினத்தின், வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை 10½ மணிநேரம் நடந்தது. திண்டுக்கல் தொழில் அதிபர் சென்னை தியாகராயநகரை சேர்ந்த தொழில் அத

Update: 2016-12-24 22:30 GMT

திண்டுக்கல்

சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்ட திண்டுக்கல் தொழில் அதிபர் ரத்தினத்தின், வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை 10½ மணிநேரம் நடந்தது.

திண்டுக்கல் தொழில் அதிபர்

சென்னை தியாகராயநகரை சேர்ந்த தொழில் அதிபர் சேகர்ரெட்டி. இவருடைய வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ரூ.34 கோடிக்கு புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து சேகர்ரெட்டி மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

மேலும் சேகர்ரெட்டிக்கு ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுத்ததாக கூறி, ஆடிட்டர் பிரேம்குமார், திண்டுக்கல்லை சேர்ந்த தொழில் அதிபர் ரத்தினம், புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டணத்தை சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர்கள் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

வீட்டில் அதிரடி சோதனை

இந்த நிலையில் திண்டுக்கல் ரவுண்டுரோடு அருகே ஜி.டி.என். சாலையில் உள்ள தொழில் அதிபர் ரத்தினத்தின் வீட்டுக்கு நேற்று காலை 6.30 மணிக்கு ஒரு காரில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேர் வந்தனர். பின்னர் அதிகாரிகள் வந்த கார், ரத்தினத்தின் வீட்டு வளாகத்திற்குள் சென்றது. உடனே வீட்டின் முன்பக்க கேட் உள்பக்கமாக பூட்டப்பட்டது. வீட்டில் ரத்தினத்தின் மனைவி செல்வி, 2–வது மகன் வெங்கடேசன் மற்றும் உறவினர்கள் சிலர் இருந்துள்ளனர். அவர்கள் யாரையும் அதிகாரிகள் வெளியே விடவில்லை. மேலும் அவர்களிடம் அதிகாரிகள் 5 மணி நேரம் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

மேலும் வீட்டில் உள்ள அனைத்து அறைகள், அலமாரிகள், பீரோ ஆகியவற்றையும் சோதனை செய்தனர். அதேபோல் கணினி, மடிக்கணினி ஆகியவற்றையும் கைப்பற்றி முக்கிய தகவல்கள் இருக்கிறதா, என்பது குறித்து ஆய்வு செய்தனர். இந்த சோதனையின் போது சில ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.

அலுவலகம்

அந்த வீட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் தான் ரத்தினத்தின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் ரத்தினம் நடத்திவரும் செங்கல்சூளை, மணல் குவாரி, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட அனைத்து தொழில்களுக்கும் தலைமை அலுவலகமாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து வருமானவரித்துறை அதிகாரிகள் அங்கு சென்றனர்.

அங்கு மேலாளர் செல்வராஜ், பெண் ஊழியர் ஒருவரும் இருந்தனர். சிறிது நேரத்தில் ரத்தினத்தின் மனைவி, மகனை வருமான வரித்துறையினர் அங்கு வரவழைத்தனர். உடனே அலுவலகம் உள்பக்கமாக பூட்டப்பட்டது. அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், கணினி ஆகியவற்றை சோதனை செய்தனர். அங்கு காலை 11.30 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது. சோதனை முடிந்ததும் அதிகாரிகள் சில ஆவணங்களை பைகளில் எடுத்துக் கொண்டு தாங்கள் வந்த காரில் புறப்பட்டு சென்றனர்.

ரூபாய்நோட்டு மாற்றிய ஆவணம்

அப்போது ரத்தினம் செய்து வரும் தொழில்கள், அதற்கான ஆவணங்களை கேட்டு அதிகாரிகள் சோதனை செய்ததாக தெரிகிறது. மேலும் சென்னையில் கைதான தொழில்அதிபர் சேகர்ரெட்டிக்கு ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுத்ததாகத்தான், ரத்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனவே, சேகர்ரெட்டிக்கு ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுத்ததற்கான ஆவணங்கள் ஏதேனும் இருக்கிறதா? என அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிகிறது. அதில் சில ஆவணங்கள் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. அந்த ஆவணங்களுடன், கணினி ஹார்டு டிஸ்க்கையும் அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்று உள்ளனர். இதுகுறித்து சோதனை முடித்து வெளியே வந்த அதிகாரிகளிடம் கேட்டபோது, பதில் கூற மறுத்து விட்டனர்.

ரத்தினம் வீடு, அலுவலகத்தில் நேற்று காலை 6.30 மணி முதல் மாலை 5 மணிவரை மொத்தம் 10½ மணிநேரம் சோதனை நடந்தது. ரத்தினம் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவருடைய வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாடகை காரில் வந்த அதிகாரிகள்

திண்டுக்கல் தொழில் அதிபர் ரத்தினத்தின் வீட்டில் சோதனை செய்ய திருச்சி மண்டல வருமான வரித்துறை அதிகாரிகள் வாடகை காரில் வந்தனர். அந்த கார், அரியலூரை சேர்ந்தது ஆகும். ரத்தினம் வீட்டில் சோதனை செய்வதற்காக புறப்பட்ட அதிகாரிகள், தனியார் டிராவல்ஸ் ஏஜென்சி மூலம் அந்த காரை வாடகைக்கு எடுத்துள்ளனர். சோதனை விஷயம் வெளியே கசியாமல் இருப்பதற்காக திண்டுக்கல்லில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி வாடகைக்கு எடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்