சென்னையில் 30–ந் தேதி நடக்கிறது வருமான வரி உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்

வருமான வரி உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தக்கோரி சென்னையில் வருகிற 30–ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அரசு பணியாளர்கள் சங்க கவுரவத்தலைவர் பாலசுப்பிரமணியம் கூறினார். நிர்வாகிகள் கூட்டம் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் ஈரோடு மாவட்ட கிளை நிர

Update: 2016-12-24 22:15 GMT

ஈரோடு,

வருமான வரி உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தக்கோரி சென்னையில் வருகிற 30–ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அரசு பணியாளர்கள் சங்க கவுரவத்தலைவர் பாலசுப்பிரமணியம் கூறினார்.

நிர்வாகிகள் கூட்டம்

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் ஈரோடு மாவட்ட கிளை நிர்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் பி.கே.சிவக்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சங்கத்தின் கவுரவத்தலைவர் பாலசுப்பிரமணியம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–

தமிழக அரசு 8–வது ஊதிய மாற்றத்திற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். அரசு அலுவலகங்களில் ஒப்பந்தம், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் 3 லட்சம் ஊழியர்களுக்கு நிரந்தர ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை போனஸ் தொகையாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30–ந் தேதி காலை சென்னையில் தலைமைச்செயலாளரிடம் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட உள்ளது.

இதேபோல் வருமானவரி உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும், காவிரி பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை முன்பு வருகிற 30–ந் தேதி மாலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தீர்மானம்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

ஈரோடு மாவட்டத்தில் 32 அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவ–மாணவிகள் விடுதிகள் உள்ளன. இதில் மொத்தம் 8 துப்புரவு தொழிலாளர்கள் மட்டுமே இருப்பதால் தூய்மை பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. எனவே விடுதிகளில் உள்ள துப்புரவு தொழிலாளர்களின் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

விடுதியில் 100 மாணவர்களுக்கு அதிகமாக இருந்தால் துப்புரவு தொழிலாளருக்கு ரூ.2 ஆயிரத்து 500, 100 மாணவர்களுக்கு குறைவாக இருந்தால் ரூ.2 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.4 ஆயிரத்து 500 நிர்ணயிக்க வேண்டும்.

மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் மலர்விழி சந்திரலேகா மற்றும் பகுதிநேர துப்புரவு தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்