திருவாரூரில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் விவசாய சங்க மாநில தலைவர் பேட்டி
திருவாரூரில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாய சங்க மாநில தலைவர் பாலகிருஷ்ணன் கூறினார். பேட்டி திருவாரூருக்கு வந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்
திருவாரூர்,
திருவாரூரில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாய சங்க மாநில தலைவர் பாலகிருஷ்ணன் கூறினார்.
பேட்டிதிருவாரூருக்கு வந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகத்தில் வரலாறு காணாத மிகப்பெரும் வறட்சி நிலவி வருகிறது. பருவ மழை பொய்த்து விட்டது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி கர்நாடக அரசு காவிரி நீரை தரவில்லை. மத்திய அரசும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தற்கொலை என்பது அன்றாட செய்திகளாகி விட்டன. கடந்த 1½ மாதத்தில் மட்டும் சுமார் 40 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
நரேந்திர மோடி அரசின் பொறுப்பற்ற செல்லாத நோட்டு அறிவிப்பால் கிராமப்புற பொருளாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் மிகப்பெரிய நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு செயலற்ற அரசாக இருந்து வருகிறது.
தமிழக அரசு தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் அறையில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டு பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளது. சேகர் ரெட்டி என்பவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் தங்க கட்டிகள் உலக மக்களை வியப்பில் ஆழ்த்தியது. அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் ராம மோகன் ராவ் மீது வருமான வரித்துறையினர் சோதனையிட்டதால் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தலா ரூ.10 லட்சம் நிவாரணம்எனவே தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். நெற் பயிர் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு வறட்சி கால நிவாரணம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 28–ந் தேதி முதல் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது.
கோரிக்கைகள் மீது உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை போராட்டம் தொடர உள்ளது. போராட்டத்தை அலட்சியப்படுத்தினால் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மாரிமுத்து, மாவட்ட செயலாளர் நாகராஜன், விவசாய சங்க மாவட்ட தலைவர் ரெங்கசாமி, மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, நிர்வாகிகள் கலியபெருமாள், குமாரராஜா, ராமசாமி உள்பட பலர் உடன் இருந்தனர்.