பேரையூர் பகுதிகளில் மழையின்றி தரிசாக கிடக்கும் மானாவரி விவசாய நிலங்கள்

பேரையூர் பகுதிகளில் மழை பெய்யாததால், இங்குள்ள நிலங்கள் உழுத நிலையிலேயே தரிசாக கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர். உழுத நிலையில் பேரையூர் தாலுகாவிலுள்ள வேப்பம்பட்டி, விட்டல்பட்டி, டி.ராமநாதபுரம், வண்டப்புலி, சாப்டூர், கணவாய்பட்டி

Update: 2016-12-24 22:30 GMT

பேரையூர்,

பேரையூர் பகுதிகளில் மழை பெய்யாததால், இங்குள்ள நிலங்கள் உழுத நிலையிலேயே தரிசாக கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

உழுத நிலையில்

பேரையூர் தாலுகாவிலுள்ள வேப்பம்பட்டி, விட்டல்பட்டி, டி.ராமநாதபுரம், வண்டப்புலி, சாப்டூர், கணவாய்பட்டி, உள்ளிட்ட பகுதியிலுள்ள மானாவரி விவசாய நிலங்கள் தரிசாக கிடக்கிறது. இப்பகுதிகளிலுள்ள மேற்குதொடர்ச்சி மலையடிவார மானாவரி விவசாய நிலங்கள் பெரும் அளவில் உழுத நிலையிலேயே கிடந்து வருகிறது.

இதுசம்மந்தமாக வேப்பம்பட்டி யாழ்பாணம் ரவி கூறியதாவது, சரியாக மழைபெய்யாததால் இப்பகுதியை சேர்ந்த மானாவரி விவசாயிகள் தங்களது நிலங்களை உழுத நிலையிலேயே போட்டுவிட்டனர். கடந்த 5 ஆண்டுகளாக மழை சரியாக பெய்யவில்லை. மேலும் தற்போது பெய்த மழையை நம்பி நிலத்தை உழுது மட்டும் போட்டுள்ளோம்.

தரிசான நிலங்கள்

அதன்பிறகு மழை பெய்யாததால், விவசாயம் பணிகளை முழுமையாக செய்ய முடியவில்லை. உழுத கூலியை மட்டும் கொடுத்து தப்பித்தால் போதும், என இப்பகுதி விவசாயிகள் தங்களது நிலங்களை தரிசாக போட்டுள்ளனர். மேலும் கூலிவேலைக்கு செல்லக்கூட விவசாயம் இல்லாமல் போயிவிட்டது எனக் கவலையுடன் தெரிவித்தார்.

வண்டப்புலியைச்சேர்ந்த வரதராஜன் கூறியதாவது, இப்பகுதியில் மழையின்றி அதிக அளவிலான நிலங்கள் விவசாயம் செய்யமுடியாமல் தரிசாக கிடக்கிறது. நிலத்தின் உரிமையாளர்கள் சிலர் வெளியூர்களுக்கு கூலி வேலைக்காக சென்றுவிட்டனர். இங்குள்ள சிலர் நூறு நாள் வேலையில் கூலிவேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இந்தநிலை நீடித்தால் இப்பகுதி கடும்வறட்சிநிலைக்கு தள்ளப்படும் என்று கவலையுடன் கூறினார். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மழையின்றி நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. குடிநீருக்காக மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளதால், இப்பகுதியை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று கூறினர்.

மேலும் செய்திகள்