கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் தொடர்ந்து 2–வது நாளாக அணிவகுத்து நின்ற வாகனங்கள் பொதுமக்கள் பரிதவிப்பு

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் தொடர்ந்து 2–வது நாளாக நீண்ட தூரத்திற்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பொதுமக்கள் பரிதவித்தனர். கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி கிருஷ்ணகிரியில் நகரின் மையப்பகுதியில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. வாரந்தோறும் வெள்ளி,

Update: 2016-12-24 23:00 GMT

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் தொடர்ந்து 2–வது நாளாக நீண்ட தூரத்திற்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பொதுமக்கள் பரிதவித்தனர்.

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி

கிருஷ்ணகிரியில் நகரின் மையப்பகுதியில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. வாரந்தோறும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சுங்கச்சாவடியை கடந்து வாகனங்கள் செல்வது என்றாலே பெரும் போராட்டம் தான் என்று கூறலாம். சாதாரண நாட்களில் 10 நிமிடங்களில் இந்த சுங்கச்சாவடியை கடக்க நேர்ந்தால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் அரைமணி நேரம் ஆகும்.

அந்த அளவிற்கு கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் வாகனங்களும், ஓசூர் நோக்கி செல்லக்கூடிய வாகனங்களும் இந்த சாலையில் அணிவகுத்து நிற்கின்றன. நேற்று முன்தினம் இந்த சுங்கச்சாவடியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை காரணமாக ஏராளமானவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றதாலும் நீண்ட நேரமாக வாகனங்கள் காத்து நின்றன.

2–வது நாளாக அணிவகுப்பு

இந்த நிலையில் தொடர்ந்து 2–வது நாளாக நேற்று அதிகாலை முதல் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் இருந்து கலெக்டர் அலுவலகம், மசூதி என குந்தாரப்பள்ளி கூட்டுரோடு வரையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பரிதவித்தனர். அனைத்து வாகனங்களும் சுங்கச்சாவடியை கடந்து செல்ல சுமார் ஒன்றரை முதல் 2 மணி நேரம் ஆனது.

இதனால் ஓசூரில் இருந்து சென்ற கிருஷ்ணகிரி நோக்கி சென்ற பல வாகனங்களும், சூளகிரி, உத்தனப்பள்ளி, ராயக்கோட்டை வழியாக கிருஷ்ணகிரிக்கும், ஓசூரில் இருந்து ராயக்கோட்டை வழியாக கிருஷ்ணகிரிக்கும் சென்றன. அதே போல சேலம், தர்மபுரி போன்ற நகரங்களில் இருந்து வந்த வாகனங்களும், கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலம், நீதிமன்ற சாலை வழியாக ராயக்கோட்டை சென்று அங்கிருந்து ஓசூருக்கு வந்தன.

இருசக்கர வாகன ஓட்டிகள்

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம், குந்தாரப்பள்ளி, பந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோரமாக உள்ள பிளாட்பாரத்தில் வண்டியை ஓட்டி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் ஆம்புலன்ஸ், அரசு வாகனங்கள் சாலையின் மறுபுறம் வழியாக சென்று மாற்றுபாதையில் நுழைந்தே செல்ல நேரிட்டது. இதனால் அரசு அலுவலர்கள், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் மிகவும் பாதிக்கப்பட்டார்கள்.

2 மணி நேரமாக சாலையில் காத்திருக்க முடியாமல் பலரும் வாகனங்களை திருப்பி செல்ல நேரிட்ட்டது. சிலரோ போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வழியாக நுழைந்து, அந்த பகுதியில் உள்ள கரடுமுரடான சாலை வழியாக கிருஷ்ணகிரி நகருக்குள் நுழைந்து, சென்றார்கள். கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் அரசு வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், காவல் துறை வாகனங்கள் உடனடியாக செல்ல தனிப்பாதை உள்ளது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த பாதை வழியாக அரசு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.

மேலும் பயணிகளை ஏற்றி செல்லக்கூடிய பஸ்கள் உடனடியாக செல்ல தனிப்பாதை கொடுக்க வேண்டும் என்று பல முறை தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்