இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி தங்கச்சிமடத்தில் ஆர்ப்பாட்டம்

இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்கக்கோரி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 51 பேரையும், அவர்களது

Update: 2016-12-24 22:30 GMT

ராமேசுவரம்,

இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்கக்கோரி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 51 பேரையும், அவர்களது படகுகளையும் விடுவிக்கக்கோரியும், தமிழக மீனவர்களை கைது செய்து தொந்தரவு கொடுத்து வரும் இலங்கை கடற்படையை கண்டித்தும், மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்காத மத்திய–மாநில அரசுகளை கண்டித்தும் ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தங்கச்சிமடம் முன்னாள் ஊராட்சி தலைவர் ஞானசீலன் தலைமை தாங்கினார். ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர்கள் போஸ், சேசுராஜா,எமரிட், சகாயம், நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் எஸ்.பி.ராயப்பன், பாம்பன் முன்னாள் ஊராட்சி தலைவர் பேட்ரிக், நிரபராதி மீனவர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பின் தலைவர் அருளானந்தம், மீனவ மகளிரணி தலைவி இருதயமேரி உள்படட ஏராளமான மீனவர்களும், மீனவ பெண்களும் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

மிகப்பெரிய அளவில் போராட்டம்

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மீனவர் சங்க தலைவர்கள் போஸ், சேசுராஜா ஆகியோர் கூறியதாவது:–

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று மத்திய–மாநில அரசுகளுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

மீனவர்கள் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தினால் தான் மீனவர்களின் பிரச்சினை குறித்து அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்றால், அதையும் செய்வதற்கு தயாராக இருக்கின்றோம்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பாம்பன் மீனவர் கிறிஸ்டி உடல்நலக் குறைவு காரணமாக இலங்கை மன்னாரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.அவரது உடல்நிலை குறித்து மத்திய–மாநில அரசுகள் உடனடியாக முழுமையான விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்