வரலாற்று வில்லன்கள்

வரலாற்றில் சில தலைவர்களும், சில மனிதர்களும் மாபெரும் வில்லன்களாக உருவெடுப்பதுண்டு. ஒரு குழுவுக்கு ஹீரோவாக இருப்பவர்கள், இன்னொரு குழுவுக்கு வில்லனாக மாறிவிடுகிறார்கள். இன்னும் சிலர் எல்லோருக்குமே வில்லன்கள் தான். இப்படிப்பட்ட வில்லன் களில் டாப்–10 இந்த வாரம்.

Update: 2016-12-24 10:18 GMT
ரலாற்றில் சில தலைவர்களும், சில மனிதர்களும் மாபெரும் வில்லன்களாக உருவெடுப்பதுண்டு. ஒரு குழுவுக்கு ஹீரோவாக இருப்பவர்கள், இன்னொரு குழுவுக்கு வில்லனாக மாறிவிடுகிறார்கள். இன்னும் சிலர் எல்லோருக்குமே வில்லன்கள் தான். இப்படிப்பட்ட வில்லன் களில் டாப்–10 இந்த வாரம்.

டோஜோ ஹிடேகி : 1884–ல் பிறந்த இவருக்கு, கொடுங்கோலன்களின் பட்டியலில், எப்போதுமே டாப் லிஸ்டில் இடம் உண்டு. ஜப்பானில் ராணுவ ஜெனரலாக பதவியேற்றபின், இவர் சொல்வதெல்லாம் தான் சட்டமானது. ஒட்டு மொத்த நாட்டின் கட்டுப்பாடே இவரிடம் தான் இருந்தது.

பிரதமர், அமைச்சரவைகள் எல்லாமே இவர் சொற்படி ஆடும் இடங்களாயின. நாஜிக்களோடு தொடர்பு வைத்திருந்தவர். ஹிட்லரிடம் உலகமே அடிபணியும் எனும் கனவு அவருக்கு இருந்தது. ஜப்பானுக்கு வெளியே இருந்த ஆசிய நாடுகளோடு இவர் செய்த தேவையற்ற யுத்தங்களில் இறந்து போனவர்கள் சுமார் 50 லட்சம்!

இரண்டாம் நிக்கோலஸ் : ரஷியாவின் கடைசி மன்னர் இவர் தான். 1868–ம் ஆண்டு பிறந்த இவர், 1894 முதல் 1917 வரை மன்னராக இருந்தார். இவரது செல்லப்பெயர் ‘பிளடி நிக்கோலஸ்’. இதை வைத்தே இவரது குணத்தைப் புரிந்து கொள்ளலாம். வன்முறையின் உச்சகட்டமானவர். அரசியலில் தனக்கு எதிராய் முளைப்பவர்கள் யாராய் இருந்தாலும், அவர்களை கிள்ளி எறிவதில் இவருடைய கொடூரமும், ராஜ தந்திரமும் வெளிப்படும். சுமார் 33 லட்சம் ரஷியர்களின் மரணத்துக்கு இவரது தவறான அணுகுமுறைகளே காரணம் என்கிறது வரலாறு.

இடி அமீன்
: ரொம்ப அராஜகம் செய்பவர்களுக்கு நாம் இடும் பட்டப் பெயர் ‘இடி அமீன்!’ 1951–ம் ஆண்டு உகாண்டாவின் குத்துச் சண்டைச் சாம்பியனானவர், 1960 வரை தொடர்ந்து சாம்பியன் தான்.

1925–ல் பிறந்த இவர், 1971 முதல் 1979 வரையிலான காலகட்டத்தில் உகாண்டா பிரதமராக இருந்தார். அடக்குமுறை, சர்வாதிகாரம், மனித உரிமை மீறல் என எதையும் விட்டு வைக்காமல் செய்தவர்.

இவர் குறைந்த பட்சம் ஒரு 5 லட்சம் பேரையாவது கொன்றிருப்பார் என்பது பொதுவாக ஒத்துக்கொள்ளப்பட்டிருக் கிறது. இவர் மனிதர்களைத் தின்னும் ‘அகோரி’ டைப் ஆசாமி. இவருடைய ஒரு மனைவியை இவரே கொன்று தின்று விட்டார் என்றெல்லாம் திடுக் கதைகள் உலவுகின்றன.  2003–ம் ஆண்டு சவுதி அரேபியாவில் வைத்து இவர் மரணமடைந்தார்.

இடி அமீன், ஹிட்லரின் தீவிர ரசிக ராம்!. ஜாடிக்கேத்த மூடி!

ஜோசப் ஸ்டாலின் : சிலருக்கு இவர் ஒரு ஹீரோ. பலருக்கு வில்லன். இவர் ஹீரோ ஆகக் காரணம், உலகின் பின்நிலையில் இருந்த ரஷியாவை முன்னணி நாடாகக் கொண்டு வந்த பெருமை இவருக்கு உண்டு. ஆனால் அதற்கு அவர் அளித்த விலை, பல லட்சம் அப்பாவிகளின் உயிர் என்பது தான் அவரை வில்லனாக பார்க்க வைக்கிறது.  

ஸ்டாலினின் இளம் வயது விருப்பம் ‘சாமியாராக போவது’ என்பது சுவாரசியமான தகவல். 1922 முதல் 1953 வரை சோவியத் யூனியனின் கம்யூனிச கட்சியின் பொதுச்செயலாளர் அவர் தான். 1924–ல் லெனின் மறைந்ததும் சோவியத் யூனியனின் தலைவரானார்.

இவருடைய காலத்தில் எதிரிகள் எனும் பெயரில் கொல்லப்பட்டவர்கள் பல லட்சம் பேர். இதில் போலந்து மக்கள் மட்டுமே சுமார் இரண்டரை லட்சம் என்கிறது போலந்து நாட்டு வரலாற்றுக் குறிப்பு ஒன்று.

‘கொள்கைக்காக கொலை செய்வது தவறில்லை’ எனும் கொள்கை கொண்டவர் என ஸ்டாலினைக்  குறித்த தகவல்கள் உண்டு. 1953–ம் ஆண்டு மார்ச் 5–ந் தேதி தனது 74–வது வயதில் இவர் இறந்தார்.

இரண்டாம் லியோபோல்ட்
: இருபதாம் நூற்றாண்டின் கொடுமையான கொலையாளிகளில் ஒருவர் இவர்.  தனது தந்தை முதலாம் லியோபோல்ட் இறந்த பின், 1865–ல் பெல்ஜியம் மன்னராகி தனது கடைசி காலம் வரை அதே நிலையில் வாழ்ந்தார். இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணியின்             சொந்தக்காரர் என்பது கொசுறு செய்தி.

மனித உரிமை மீறல்கள் பற்றியெல்லாம் சற்றும் அலட்டிக் கொள்ளாத சுபாவம் இவருக்கு. மக்களுடைய கைகளையும், கால்களையும் வெட்டுவதை ஏதோ நகம் வெட்டுவது போலச் செய்தார். 1885–க்கும் 1908–க்கும் இடையேயான இவரது காலத்தில் கொல்லப்பட்டவர்கள், சுமார் 10 லட்சம் காங்கோலியன் கள்.  ஒரு வழியாக, 1909 டிசம்பர் 17–ந் தேதி இறந்து போனார்.

போல் போட்  : 1928–ம் ஆண்டு மே மாதம் கம்போடியத் தலைநகர் பக்கத்திலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார் போல் போட். 1953–ல் கம்பூச்சியன் மக்கள் புரட்சி இயக்கத்தில் சேர்ந்தார்.1975–ல் கம்போடியா முழுமையாக இவரது கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

அப்போது ஆரம்பித்தது கம்போடியர்களின் கஷ்ட காலம். முந்தைய அரசு தொடர்பான பணியில் இருந்த அனைவருமே ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர். சுமார் 15 லட்சம் மக்கள் பசியினாலும், நோயினாலும் செத்துப்போனார்கள்.

இவர் ஆரம்பித்த ‘எஸ் 21’ எனும் சித்திரவதைக் கூடம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாகுபாடின்றி சுமார் 20 ஆயிரம் பேரை சித்திரவதை செய்து கொலை செய்தது. இப்படி கொடுமையின் உச்சமாய் இருந்த போல் போட் 1998–ல் உயிரிழந்தார்.

மூன்றாம் விலாட்
: குரூரத்தின் உச்சமாக விளங்கிய ருமேனியாவின் மூன்றாம் விலாட்டுக்கு ‘டிராகுலா’ என்ற பெயர் உண்டு. ருமேனியாவில் உள்ள வாலாசியா மன்னர் இவர். 1431–ல் பிறந்து எல்லா கொடுமைகளையும் செய்துவிட்டு, 1476–ல் உயிரை விட்டார்.

இவரது ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை நாற்பதாயிரம் முதல் ஒரு லட்சம்  வரை. எதிரிகளை சித்திரவதை செய்து ரசிக்கும் குரூரமான சைக்கோ மனம் இவருக்கு. கைகளையும், கால்களையும் கூர்மையில்லாத ஆயுதங்    களால் வெட்டுவது, உயிருடன் தோலை உரித்து எறிவது, எரியும் நெருப்பில் எறிவது, தலையில் நீளமான ஆணிகளை அடிப்பது, இரண்டு கால்களையும் இரண்டு குதிரைகளில் கட்டி எதிரியின் உடலை பிய்த்து எறிவது, கொதிக்கும் எண்ணெயில் போடுவது, கண்களை  நோண்டி எடுப்பது என அத்தனை கொடுமைகளையும் செய்தவர். கொல்வதற்காகவே புதுப்புது ஆயுதங்களையும், வழிமுறைகளையும் கண்டுபிடித்துக் கொண்டிருந்தவர்.

1976–ல் துருக்கியருக்கு எதிரான போரில் இவர் கொல்லப்பட்டார்.

அடால்ப் ஹிட்லர் : உலக வில்லன்களில் எல்லோருக்கும் தெரிந்தவர். இவரைப் பற்றி சொல்ல எதுவுமே இல்லை என்னும் அளவுக்கு, வரலாறு இவரை அலசிக் காயப்போட்டு விட்டது.

ஏறக்குறைய ஒன்றே முக்கால் கோடி பேருடைய சாவுக்குக் காரணமாய் இருக்கிறது ஹிட்லரின் பெயர். அதிலும் யூதர் களுக்குப் பிடிக்காத பெயர்களில் முதலிடம் இவருக்கு தான். இவர் கொன்ற யூதர்களின் எண்ணிக்கை குறைந்த பட்சம் அறுபது லட்சம்.  

1889–ம் ஆண்டு ஏப்ரல் 20–ல் ஆஸ்திரியாவில் பிறந்த ஹிட்லர், 1920–ல் நாஜி படையில் சேர்ந்து 1921–ல் அதன் தலைவரானார். 1933 முதல் 1945 வரை ஜெர்மனியை ஆண்டார்.  

1945–ம் ஆண்டு ஏப்ரல் 30–ந் தேதி ஹிட்லர் தன் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்.

மாக்ஸ்மில்லன் ராபெஸ்பியர்
: ‘நாட்டுக்காக படுகொலை செய்வதெல்லாம் புண்ணியம்’ எனும் கொள்கைகொண்டவர். பல்லாயிரம் பேருடைய சாவுக்குக் காரணமாகி, மனித குலத்தின் வில்லன்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார்.

1978 மே மாதம் 6–ந் தேதி பிறந்தவர், மேக்ஸ்மில்லன் ராபெஸ்பியர். ‘மன்னன் பதினாறாம் லூயியைக் கொல்லவேண்டும்’ எனும் கடுமையான பிரசாரத்தினால் இவருடைய பெயர் பிரபலமடைந்தது. தப்பி ஓட முயன்ற மன்னன் பிடிபட்டு, பின்னர் சாவுக்கும் கையளிக்கப்பட்டான்.

அரசியல் வாழ்க்கைக்குள் நுழைந்த இவருடைய உண்மைக் குணத்தை பிரெஞ்சுப் புரட்சி வெளிச்சம் போட்டுக் காட்டியது. புரட்சி முடிவுக்கு வந்த பத்து மாதங்களில் மட்டும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரம் என்கிறது வரலாறு. இவருடைய தலைமையில் அமைந்த புரட்சிப் படையினரால் கொல்லப்பட்டவர்கள் இவர்கள்.

‘மன்னிப்பைத் தூக்கி தூர எறி, ஆயுதத்தை கைகளில் ஏந்து’ என்பது இவரது மாபெரும் முழக்கம். இவர் 1794–ம் ஆண்டு ஜூலை 28–ந் தேதி கொல்லப்பட்டார்.

ஹிரோகிடோ  : ஜப்பானின் மன்னனாக 1926–ல் முடிசூட்டப்பட்ட, இவருடைய பல முடிவுகள் உலக வரலாற்றில் இருந்து அழிக்க முடியாதவை. சீனாவுடனான போரைத் தீவிரமாக ஆதரித்தவர் இவர். இரண்டாம் உலகப்போருக்கு தீ மூட்டிவிட்ட பியர்ல் ஹார்பர் தாக்குதலுக்கு அனுமதி வழங்கியவரும் இவரே. ஜப்பானில் அணுகுண்டு போடப்பட்ட உலக  துயரத்துக்கு ஒருவகையில் இவரும் பொறுப்பாளி என்னும் தகவல்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை.

1937–ம் ஆண்டு ஜப்பான் ராணுவ வீரர்கள் நடத்திய அட்டகாசம் இவரை வில்லாதி வில்லனாக்கியது. ஆறு வாரம் நீடித்த இந்த ராணுவக் கொடுமை ‘ரேப் ஆப் நான்கிங்’ என அழைக்கப்படுகிறது.

ராணுவ வீரர்கள் எல்லோரும் சாவி கொடுத்த வில்லன் ரோபோக்களாகிப் போனார்கள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு என எல்லா அட்டகாசங்களையும் ராணுவம் செய்தது. குழந்தைகள், பெண்கள் என குவியல் குவியலாக மக்கள் கொல்லப்பட்டனர். எப்படியும் ஒன்றரை லட்சம் முதல் 3 லட்சம் பேர் வரை இறந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

(தொடரும்)

மேலும் செய்திகள்