ஜூலியஸ் சீசரை கடத்திய கடற்கொள்ளையர்கள்!

உலக வரலாற்று நாயகர்களுள் ஒருவராகத் திகழும் ஜூலியஸ் சீசரையே (இவரின் பெயரால்தான் ‘ஜூலை’ மாதம் உருவானது) ஒருமுறை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுவிட்டார்கள் தெரியுமா? ரோமானிய சாம்ராஜ்யத்தின் சக்கரவ

Update: 2016-12-24 09:46 GMT
ஜூலியஸ் சீசர்

லக வரலாற்று நாயகர்களுள் ஒருவராகத் திகழும் ஜூலியஸ் சீசரையே (இவரின் பெயரால்தான் ‘ஜூலை’ மாதம் உருவானது) ஒருமுறை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுவிட்டார்கள் தெரியுமா?
ரோமானிய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த ஜூலியஸ் சீசருக்கு அப்போது வயது 25. ஏகன் கடற்பகுதியில் தனது வீரர்களுடன் கப்பலில் பயணமாகிக் கொண்டிருந்தார்.

அச்சமயத்தில்தான் சிசிலிய கடற்கொள்ளையர்கள் ஜூலியஸ் சீசரின் கப்பலை அதிரடியாக இடைமறித்து அவரை கடத்திச் சென்றுவிட்டனர்.
சீசரை விடுவிப்பதற்கு பணயத் தொகையாக 20 ‘டேலண்ட்’ வெள்ளி (அதாவது 620 கிலோ வெள்ளி. இன்றைய மதிப்பில் சுமார் 4 கோடி ரூபாய்) வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கத் தீர்மானித்தனர் கடற்கொள்ளையர்.
அதைக் கேட்ட சீசர் சிரித்தார். ‘என்னப்பா... என்னை விடுவிப்பதற்கு வெறும் 20 ‘டேலண்ட்’ வெள்ளியா? 50 டேலண்ட் (1550 கிலோ வெள்ளி) வேண்டும் என்று கேளுங்கப்பா’ என்றார்.

கூடுதலாக கேட்பதற்கு கடற்கொள்ளையர்களுக்கு கசக்குமா என்ன? அதன்படியே பயணத் தொகையை உயர்த்திய அவர்கள், அதைப் பெற்றுவருவதற்கு சீசரின் வீரர்கள் சிலரை அனுப்பினர்.

இப்போது, கடற்கொள்ளைக் கூட்டத்துக்கு மத்தியில் சீசர், அவரது உதவியாளர்கள் இருவர், நண்பர் ஒருவர் என நான்கு பேர் மட்டுமே.
ஆனால் சீசருக்குள் இருந்த இயல்பான வீரம், அவரை கடற்கொள்ளையர்களை கண்டு அஞ்சச் செய்யவில்லை. மாறாக ஒருகட்டத்தில், சீசர் அவர்களையே தனது ஏவலாட்கள் போல நடத்தத் தொடங்கிவிட்டார்.

தான் பகலில் குட்டித் தூக்கம் போடும்போதும், இரவில் உறங்கும்போதும் அவர்கள் பேசக் கூடாது என்றுகூட உத்தரவு போட்டார்.

பணயப் பொருளை பெற்றுவரச் சென்றவர்கள் திரும்பி வர பல நாட்கள் ஆகும் என்ற நிலையில், பொழுது போக வேண்டுமே? சீசர், சொற்பொழிவு உரைகளை எழுதினார். பாடல்களை எழுதி மெட்டு அமைத்தார். அவற்றை கடற்கொள்ளையர்களுக்கு படித்தும், பாடியும் காண்பித்தார்.

கடற்கொள்ளையர்களுடன் இணைந்து பயிற்சிகள் செய்த ஜூலியஸ் சீசர், அவர்களுடன் ஒன்றாக விளையாடவும் செய்தார். ஆனால் ஒருபோதும் அவர்களுக்குக் கட்டுப்பட்ட கைதி போல அவர் நடந்துகொள்ளவில்லை. தான்தான் அவர்களது தலைவர் என்பது போலத்தான் சீசரின் செயல்பாடுகள் இருந்தன.

கடற்கொள்ளையர்களும் அதையெல்லாம் ஏற்றுக்கொண்டனர். உரிய மரியாதை கொடுக்கவும் செய்தனர். தாங்கள் அவரை வைத்திருந்த தீவில் இஷ்டம் போல உலவிவர அனுமதித்தனர்.

ஆனால் சீசர் அவர்களுடன் ஜாலியாக பழகினாலும், தன்னை அவர்கள் பயணக் கைதியாக பிடித்து வைத்திருப்பதை ரசிக்கவில்லை. அதை சீசர் அவர்களிடம் வெளிப்படையாகவும் தெரிவித்தார்.

‘பணயப் பொருளைப் பெற்று நீங்கள் என்னை விடுவித்ததும் நான் உங்களை வேட்டையாடி கொன்றொழிப்பேன்’ என்றார், சிரிப்பும், சினமும் கலந்தவாறு.
அதேபோல அவர் விடுவிக்கப்பட்டு நாடு திரும்பியதும் துரிதமாக ஒரு படை திரட்டி, கப்பல்களில் கடற்கொள்ளையரின் தீவை நோக்கிப் பாய்ந்தார்.

சீசர் தங்களிடம் கலகலப்பாகப் பழகியதாலோ என்னவோ, கடற்கொள்ளையர்கள் அவரது மிரட்டலை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எனவே குறிப்பிட்ட தீவை விட்டு அகலவும் இல்லை. அதனால் எளிதாக அகப்பட்டுக் கொண்டனர்.

கொள்ளையர்களை கூண்டோடு அமுக்கிய சீசர், ஞாபகமாக, அவர்களுக்கு பணயப் பொருளாக வழங்கப்பட்ட வெள்ளியையும் மீட்டுவிட்டார். அதோடு அவர்கள் கொள்ளையடித்துச் சேர்த்திருந்த பொருட்களையும் கைப்பற்றிக்கொண்டார்.

‘கடற்கொள்ளையர்களை கொல்ல வேண்டாம், பாவம். வேண்டுமானால் அவர்களை அடிமைகளாக விற்றுவிடலாம்’ என்று சில அதிகாரிகள் சொன்ன யோசனையை ஜூலியஸ் சீசர் ஏற்கவில்லை.

தான் கொடுத்த ‘வாக்குறுதி’யை நிறைவேற்றும் விதமாக கொள்ளையர்கள் அனைவரையும் சிலுவையில் ஏற்றினார்.

தங்களுடன் விளையாடிக் களித்த சீசரா இது என்ற குழப்பத்துடனே கொள்ளையர்கள் உயிரை விட்டனர்.

மேலும் செய்திகள்