உயிர் பெறும் ஜார்விஸ்..!

‘அயன்மேன்’ ஹாலிவுட் திரைப்படத்தில் இடம்பிடித்திருந்த ‘ஜார்விஸ்’ என்ற கனவு தொழில்நுட்பம், பேஸ்புக் நிறுவனர் மார்க் சுகர்பெர்க்கினால் உயிர்பெற்றிருக்கிறது. ஆம்..! அந்த படத்தில் டோனி ஸ்டார்க்கின் குரல் வழி கட்டளைகளுக்கு செவிக்கொடுக்கும் ஜார்விஸ் தொழில்நுட்பம், சமைப்பது முதல் கணினி சர்வர் வேலைகள் வரை அனைத்தையுமே செய்துக்கொடுக்கும்

Update: 2016-12-24 09:14 GMT
‘அயன்மேன்’ ஹாலிவுட் திரைப்படத்தில் இடம்பிடித்திருந்த ‘ஜார்விஸ்’ என்ற கனவு தொழில்நுட்பம், பேஸ்புக் நிறுவனர் மார்க் சுகர்பெர்க்கினால் உயிர்பெற்றிருக்கிறது. ஆம்..! அந்த படத்தில் டோனி ஸ்டார்க்கின் குரல் வழி கட்டளைகளுக்கு செவிக்கொடுக்கும் ஜார்விஸ் தொழில்நுட்பம், சமைப்பது முதல் கணினி சர்வர் வேலைகள் வரை அனைத்தையுமே செய்துக்கொடுக்கும். இதற்காக பல கோடிகளை செலவழித்து ஜார்விஸை அடிக்கடி மேம்படுத்துவார்.

 இப்படி திரைப்படத்தில் மட்டும் காணக்கூடிய கனவு நிலை தொழில்நுட்பமாக இருந்த ஜார்விசுக்கு, தற்போது மார்க் சுகர்பெர்க் செயல்வடிவம் கொடுத்திருக்கிறார். ஒரு வருட கம்ப்யூட்டர் ‘கோடிங்’ வேலைகளுக்கு பிறகு மார்க், ஜார்விஸ் தொழில்நுட்பத்தை களம் இறக்கி உள்ளார்.

திரைப்பட பாணியை போலவே ஜார்விஸ் தொழில்நுட்பம், மார்க் சுகர்பெர்க்கை முழுவதுமாக புரிந்து வைத்திருக்கிறது. மார்க்கின் உறவுமுறைகள், ஊழியர் விவரங்கள், அலுவலக பணிகள்... என எல்லா தகவல்களும் ஜார்விஸின் வசம் உள்ளதால்... மார்க்கை எழுப்பி விடுவது முதல் அவர் தூங்க செல்வது வரையிலான அனைத்து செயல்பாடு களையும் உடன் இருந்து கவனிக்கிறது. மேலும் மார்க்கின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு இணைய தள தேடல்கள், அலுவலக விவரங்களை ஒரே நொடியில் தேடிக்கொடுக்கிறது.

ஜன்னல் திரையை விலக்கி விடுவது, பிரேக் பாஸ்ட் சமைத்து கொடுப்பது, மனைவி–குழந்தைகள் விழித்துவிட்டனரா... என கண்காணித்து தகவல் கொடுப்பது என மார்க்கை கற்பனை உலகிற்கு அழைத்து செல்கிறது. மேலும் ஜார்விஸ், பேஸ்புக் தொழில்நுட்பத்துடன் இணைந்திருப்பதால், அருகில் இருக்கும் வெப்–கேமராக்களை பயன்படுத்தி சுற்றி இருப்பவர்களின் விவரங்களை திரட்டிக் கொடுக்கிறது.

விளக்கை அணைப்பது, வீட்டின் வெப்பநிலையை கணித்து கூறுவது, கார்களின் என்ஜின் நிலவரத்தை கண்காணிப்பது... என மார்க்கிற்கு தொழில்நுட்ப ஆலோசகராகவும், தொழில்நுட்ப பாதுகாவலராகவும் மாறிவிட்டது. ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கும் ஜார்விஸ் தொழில்நுட்பத்தை இன்னும் சில மாதங்களில் உலக மொழிகளுக்கு மேம்படுத்த இருக்கிறாராம். இதனால் படுபிசியாக இருக்கிறார், ‘ரியல் அயன்மேன்’.

மேலும் செய்திகள்