முறிந்த மரங்களில் மலரும் ‘ஓவிய பூக்கள்’

சென்னையை புரட்டிப்போட்ட வார்தா புயல், சென்னை மாநகருக்குள் கம்பீரமாக நின்றிருந்த பிரமாண்ட மரங்களையும் விட்டுவைக்கவில்லை. புயல் காற்றில் சிக்கிய மரங்கள் எல்லாம் சின்னாபின்னமாகின. 30–40 வருடங் களாக வேரூன்றியிருந்த மரங்கள் கூட, வார்தா புயலில் ஆட்டம் கண்டன. இப்படி

Update: 2016-12-24 08:11 GMT
சென்னையை புரட்டிப்போட்ட வார்தா புயல், சென்னை மாநகருக்குள் கம்பீரமாக நின்றிருந்த பிரமாண்ட மரங்களையும் விட்டுவைக்கவில்லை. புயல் காற்றில் சிக்கிய மரங்கள் எல்லாம் சின்னாபின்னமாகின. 30–40 வருடங் களாக வேரூன்றியிருந்த மரங்கள் கூட, வார்தா புயலில் ஆட்டம் கண்டன. இப்படி முறிந்து விழுந்த மரங்களை அப் புறப்படுத்தும் பணிகள் ஒருபுறம் நடந்துக் கொண்டிருக்க... மறுபுறம், முறிந்த மரங்களில் ஓவிய பூக்கள் மலர்ந்து கொண்டிருக்கின்றன. 14 பெண்கள் இணைந்த ‘ராஷ்தா சாப்’ எனும் அமைப்பு முறிந்த மரங்களை வண்ண, வண்ண ஓவியங் களால் அழகுபடுத்தி வருகிறது.

திருவான்மியூர், பெசன்ட்நகர், அடையாறு, கிண்டி,   ஓ.எம்.ஆர்... போன்ற பகுதிகள் இவர்களின் கைங்கரியத்தால் ஓவிய சோலையாக மாறி கொண்டிருக்கின்றன. வண்ண கலவை நிறைந்த தூரிகைகளுடன் பிசியாக வரைந்துக்கொண்டிருந்த நீலுவை சந்தித்தோம். இவர் முறிந்த மரங்களில் ஓவிய பூக்களை மலரவிடுவதில் கை தேர்ந்தவர். அத்துடன் ராஷ்தா சாப் அமைப்பின் தலைவியும் இவரே...! அவர் சொல்வதை கேட்போம்...

‘‘புயலின் கோர தாண்டவம், சேதத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தினாலும்... சாய்ந்து விழுந்த மரங்களை தூரிகை களால் அழகுபடுத்தி ஆறுதல் தேடிக்கொண்டிருக்கிறோம்.

முறிந்து விழுந்த மரங்களில் புதுப்புது டிசைன்களை வரைய முடியும். பள்ளிக்கூடங்களில் முறிந்த மரங்களில் அறிவியல்– கணக்கு பார்முலாக்களையும், சாலை விதிகளை சாலையோர மரங்களிலும், ஆன்மிக கருத்துகளை ஆலய வளாகங்களிலும் ஓவிய பூக்களாக மலரவிடுகிறோம். இவையின்றி ‘பேட்டன்’ எனப்படும் டிசைன்களும் மரங்களில் இடம் பிடிக்கின்றன’’ என்பவர், நம்மோடு இத்தனை காலம் வாழ்ந்து, சுத்தமான ஆக்ஸிஜனை கொடுத்த மரங்களை.... ஓவிய தூண்களாக மாற்றி ரசிக்கவேண்டும் என்ற கருத்தை ஆழமாக பதியமிடுகிறார்.

சென்னையை சேர்ந்தவரான நீலு, ராஷ்தா சாப் அமைப்பின் மூலம் மும்பை, நெல்லூர், புதுச்சேரி, கோவா... போன்ற புயல் தாக்கிய பகுதிகளில் ஏராளமான ஓவிய பூக்களை மலரவிடுகிறார்.

‘‘எங்களுடைய வேலை மர ஓவியங்களுடன் நின்றுவிடுவதில்லை. எத்தனை ஓவியங்கள் வரைகிறோமோ.... அதில் ஒரு ஓவியத்திற்கு 20 மரக்கன்றுகள் என்ற விகிதத்தில் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு வைத்துவிட்டு செல்கிறோம். எங்களுடைய கைவண்ணத்தில் நடவு செய்யப்படும் மரக்கன்றுகள் ஒருபோதும் முறிந்துவிழுவதில்லை. ஏனெனில் நில அமைப்புகளுக்கு ஏற்ற மரக்கன்றுகளையே தேர்ந்தெடுத்து நடவு செய்கிறோம்’’ என்று கூறும் மெர்லின், இந்த அமைப்பின் இயற்கை ஆர்வலர். மரங்கள் முறிந்து விழுவதற்கான காரணங்களையும், நில அமைப்புகளுக்கு ஏற்ற மரக்கன்றுகளையும் ஆராய்ந்து ஆலோசனை வழங்குகிறார்.

‘‘சென்னை போன்ற கடற்கரை நகர பகுதிகளில் மண் தன்மைக்கு உகந்த மரங்களை நட்டு வளர்த்தால் அவை மண்ணில் ஆழமாக வேரூன்றி நிலைத்திருக்கும். குறிப்பாக புன்னை, புங்கை, பூவரச மரம், புரசை மரம், நுணா, நாட்டு பாதாம், வேப்ப மரம், காட்டு பூவரசம், வால்சுரா, சமுத்திரப்பழம், வன்னி, குட்டிப்பலா, துரிஞ்சி, வேப்பாலை, வென்னாங்கு அல்லது தடா, கல்யாண முருங்கை... ஆகிய மரவகைகள் கடற்கரை நகரங்களுக்கு சிறந்தது. இவை 150 கிலோமீட்டர் வேகத்தில் சீறும் காற்றைக்கூட சுலபமாக சமாளித்துவிடும். இந்த அடிப்படையில் தான் ஏராளமான மரங்களை நட்டு பராமரித்து வருகிறோம்’’ என்று கூறுபவர், நெல்லூரில் நடவு செய்யப்பட்டு, பல புயல்களை சமாளித்திருக்கும் ஏராளமான நாட்டு மரங்களை, சாட்சியமாக்குகிறார்.




தூரிகை பிடித்து பல ஓவியங் களை வரைந்துவரும்இவர்கள்,  ஜி.பி.எஸ்.மேப்பிங் மூலமாக சில ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். 15 லட்சம் மரங்கள் தேவைப்படும் சென்னை மாநகருக்கு, வெறும் 3.75 லட்சம் மரங்களே ஆக்ஸிஜன் வழங்கி வருகின்றன. அதிலும் வார்தா புயல் 1 லட்சம் மரங்களை நாசமாக்கிவிட... இனி வரவிருக்கும் வெயில் காலத்தை 2.75 லட்சம் மரங்களை கொண்டே சமாளிக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறதாம்.

இந்த அதிர்ச்சி ரிப்போர்ட்டுடன் ஓவிய பெண்கள் விடைக்கொடுத்தாலும், இவர்களது ஆய்வின் தாக்கம் நம்மை பலதுறை நிபுணர் களிடம் அழைத்து சென்றது.

அவர்களது கருத்துகளை கேட்போம்....

ஷோபனா மேனன் (இயற்கை ஆர்வலர்):

‘‘மரம் நடவேண்டிய அவசியத்தை விட, பல்லுயிர் வாழ்விடத்தை அதிகப்படுத்தும் மரங்களை நடவேண்டிய முயற்சியே இன்று தேவை. ‘ப்ரேம்னா’, பட்டாம்பூச்சிகளுக்குப் பிடித்த மரம். அவை இல்லாத பட்சத்தில் சென்னை மாநகருக்குள் பட்டாம்பூச்சிகளை பார்க்க முடியாது. ஒவ்வொரு பறவைகளுக்கு ஏற்ற மரவகைகள் இருக்கின்றன. அதனால் கடமைக்கு மரங்களை நடுவதை விட.. பறவைகளுக்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்து நடவேண்டும். அப்போது தான் இயற்கை சூழலுடன், பல்லுயிர் சூழலையும் பெருக்க முடியும்’’

அருண் கிருஷ்ண மூர்த்தி (நீர்நிலை பாதுகாவலர்):

‘‘மரங்களின் எண்ணிக்கை குறைய குறைய... நிலத்தடி நீர்மட்டமும், நீர் நிலைகளின் நீர் ஆதாரமும் குறைந்துவிடும். சென்னையில் வாழும் மக்களுக்கு, 2.75 லட்சம் மரங்கள் எத்தனை நாளுக்குதான் ஆக்ஸிஜன் கொடுக்கும். வெயில் காலத்தில் இதுவரை ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறையுடன், இந்த வருடம் ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆக்ஸிஜன் குறைபாடு வெப்பநிலை மாற்றத்திற்கும், இயற்கை சூழல் அழிவிற்கும் வழி வகுக்கும்’’

அரவிந்த் தருண்ஸ்ரீ (ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்):

‘‘வார்தா புயல், நில அமைப்புகளை மட்டுமல்ல கடல் அமைப்பு களையும் அலங்கோலப்படுத்தி இருக்கிறது. சென்னையை ஒட்டிய கடல்பகுதிகளில் தென்படக்கூடிய பவளப்பாறை, இயற்கை அமைப்புகள் சேதமடைந்திருப்பதுடன், மீன் கூட்டங்களின் அணிவகுப்பும் குறைந்திருக்கிறது. இந்த சூழலில் மரங்களின் குறைபாடு வெப்பநிலை மாற்றத்தை உண்டாக்கும் பட்சத்தில் பவளப்பாறை, மீன் கூட்டங்களின் நிலைப்பாடு கேள்விக்குறியாவதோடு, கடல் உயிரினங்களின் வளமும் குறைந்து விடும்’’


மேலும் செய்திகள்