வாகன சோதனையின் போது முகத்தில் டார்ச்லைட் அடித்ததால் விபத்து: மோட்டார் சைக்கிளில் மொபட் மோதி விவசாயி பலி உறவினர்கள் சாலைமறியல்
போலீசார் வாகன சோதனை நடத்திய போது, முகத்தில் டார்ச்லைட் அடித்ததால் எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மொபட் மோதி விவசாயி பலியானார். போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது பிணத்துடன் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். வாகன சோதனையால் விபத்து திருச்சி மாவ
முசிறி
போலீசார் வாகன சோதனை நடத்திய போது, முகத்தில் டார்ச்லைட் அடித்ததால் எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மொபட் மோதி விவசாயி பலியானார். போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது பிணத்துடன் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
வாகன சோதனையால் விபத்து
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள வாளவந்தி தாதம்பண்ணை கிராமத்தை சேர்ந்தவர் புரவியான் (வயது 52). விவசாயி. இவருடைய மனைவி பழனியம்மாள் (48). இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடந்த 21–ந் தேதி புரவியான் தனது மொபட்டில் மனைவியை அழைத்துக்கொண்டு முசிறியில் நடைபெற்ற வாரச்சந்தைக்கு சென்று, காய்கறிகள் வாங்கிக்கொண்டு மாலையில் மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
நான்காவது மைல் என்ற இடத்தில் சென்றபோது, அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த ஜெம்புநாதபுரம் போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீசார் டார்ச்லைட் அடித்து புரவியான் சென்ற மொபட்டை தடுத்து நிறுத்தினர். டார்ச்லைட் வெளிச்சம் புரவியானின் முகத்தில் பட்டபோது, கண்கள் கூசியதால் நிலைத்தடுமாறிய அவர், எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மொபட்டுடன் மோதினார். இதில் கணவன்–மனைவி இருவரும் கீழே விழுந்தனர். பழனியம்மாள் லேசான காயத்துடன் தப்பினார். புரவியானுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
பிணத்துடன் மறியல்இந்நிலையில் சிகிச்சை பலனின்றி புரவியான் நேற்று இறந்தார். இதனையடுத்து புரவியானின் உடலை உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் வாளவந்தி தாதம்பண்ணைக்கு கொண்டு வரும் போது, விபத்து நடந்த நான்காவது மைல் என்ற இடத்தில் ஆம்புலன்சை நிறுத்தி, பிணத்தை நடுரோட்டில் வைத்து திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். போலீசார் வாகனசோதனை என்ற பெயரில் புரவியானின் முகத்தின் மீது டார்ச்லைட் அடித்ததால் ஏற்பட்ட விபத்தில் தான் அவர் இறந்தார் என்றும், அவரது இறப்பிற்கு காரணமான போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புரவியானின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இந்த சம்பவத்தால் முசிறி–துறையூர் சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலைமறியல் குறித்து தகவல் அறிந்த முசிறி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் கிருஷ்ணகுமார், முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம், இன்ஸ்பெக்டர்கள் தா.பேட்டை சிவா, முசிறி ஆனந்த், சப்–இன்ஸ்பெக்டர்கள் அம்பிகா, சத்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, புரவியானின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதிகாரிகள் மற்றும் போலீசாரின் சமாதான பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொண்டு அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.