திருச்சியில் சிக்கிய கொள்ளை கும்பல் திண்டுக்கல் மாவட்டத்தில் 23 பவுன் நகைகளை திருடியது அம்பலம்

திருச்சியில் சிக்கிய கொள்ளை கும்பல் திண்டுக்கல் மாவட்டத்தில் 23 பவுன் நகைகளை திருடியது அம்பலமாகி உள்ளது. இந்த கும்பலை 3 திருட்டு வழக்குகளில் கைது செய்ய திண்டுக்கல் போலீசார் தீவிரம்காட்டி வருகிறார்கள். வாக்கு மூலம் திருச்சி பகுதிகளில் நடந்த திருட்டு, வழ;

Update: 2016-12-23 21:30 GMT

திண்டுக்கல்

திருச்சியில் சிக்கிய கொள்ளை கும்பல் திண்டுக்கல் மாவட்டத்தில் 23 பவுன் நகைகளை திருடியது அம்பலமாகி உள்ளது. இந்த கும்பலை 3 திருட்டு வழக்குகளில் கைது செய்ய திண்டுக்கல் போலீசார் தீவிரம்காட்டி வருகிறார்கள்.

வாக்கு மூலம்

திருச்சி பகுதிகளில் நடந்த திருட்டு, வழிப்பறி, கொள்ளை வழக்குகளில் துப்பு, துலக்குவதற்காக, அங்குள்ள தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த வேட்டையில், திருச்சி புத்தூர் ஆபிசர் காலனியை சேர்ந்த துரை என்ற துரைச்சாமி (வயது 36) தலைமையில் செயல்பட்ட கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்தனர்.

இந்த கொள்ளை கும்பலிடம் இருந்து 133 பவுன் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டன. திருச்சி போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். அதாவது, திருச்சி, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய 6 மாவட்டங்களில் தாங்கள் கைவரிசை காட்டியதாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

கைது செய்ய தீவிரம்

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 3 வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதாவது, நகர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட அண்ணாநகரில் ஒரு வீட்டில் 11½ பவுன், நகர் மேற்கு போலீஸ் நிலைய பகுதியில் உள்ள வி.ஐ.பி. நகரில் ஒரு வீட்டில் 8½ பவுன், வடமதுரை போலீஸ் நிலைய பகுதியில் ஒரு வீட்டில் 3 பவுன் என மொத்தம் 23 பவுன் தங்க நகைகளை அந்த கும்பல் திருடியது தெரியவந்தது. இந்த 3 சம்பவங்களும் பட்டப்பகலில் அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், திருச்சியில் சிக்கிய கொள்ளை கும்பல் தலைவன் துரை என்ற துரைச்சாமி உள்பட 4 பேரையும் 3 வழக்குகளிலும் கைது செய்ய போலீசார் தீவிரம்காட்டி வருகிறார்கள். இதற்காக நகர் வடக்கு போலீசார் 2–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டிலும், மேற்கு போலீசார் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டிலும், வடமதுரை போலீசார் வேடசந்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டிலும் தனித்தனியாக மனு தாக்கல் செய்து, காவலில் எடுக்க இருக்கிறார்கள்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘திருச்சியில் சிக்கிய கொள்ளை கும்பலை விரைவில் காவலில் எடுத்து கைது செய்ய இருக்கிறோம். அவர்களுக்கு வேறு ஏதேனும் வழக்குகளிலும் தொடர்பு இருக்கிறதா? என்பது பற்றியும் விசாரிக்க உள்ளோம். அவர்களிடம் இருந்து நகைகளும் மீட்கப்படும்’ என்றனர்.

காரில் வந்து கைவரிசை

திண்டுக்கல் தனிப்படை போலீசார் கூறும்போது, ‘துரை என்ற துரைச்சாமி தலைமையில் செயல்பட்ட கொள்ளை கும்பல், பெரும்பாலும் பகலிலேயே கொள்ளையடித்து உள்ளனர். அவர்கள், பொதுமக்கள் மட்டுமின்றி போலீசாருக்கே சந்தேகம் வராத வகையில் டிப்–டாப் உடையில் வலம் வந்து இருக்கிறார்கள். மேலும், காரில் வந்து நோட்டமிட்டு, பூட்டிய வீடுகளுக்கு விருந்தாளிகள் போல சென்று, கதவுகளை உடைத்து கொள்ளை சம்பவத்தை கச்சிதமாக அரங்கேற்றி உள்ளனர். இந்த கும்பல் 6 மாவட்டங்களில் மட்டும் கைவரிசை காட்டியதா? அல்லது மற்ற மாவட்டங்களிலும் கொள்ளையடித்ததா? என்ற விவரங்கள் அடுத்த கட்ட விசாரணையில்தான் தெரியவரும்’ என்றனர்.

மேலும் செய்திகள்