சிதம்பரம் பகுதியில் செல்போன் டவர்களில் பேட்டரி திருடிய கும்பல் சிக்கியது பிடிபட்ட 3 பேரிடம் இருந்து 134 பேட்டரிகள் பறிமுதல்

சிதம்பரம் பகுதியில் செல்போன் டவர்களில் பேட்டரி திருடிய கும்பல் போலீசாரிடம் சிக்கியுள்ளது. பிடிபட்ட 3 பேரிடம் இருந்து மொத்தம் 134 பேட்டரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பேட்டரிகள் திருட்டு சிதம்பரம் அண்ணாமலைநகர் கே.ஆர்.எம்.நகரில் உள்ள ஒரு தனியார் செல்

Update: 2016-12-23 23:45 GMT

சிதம்பரம்,

சிதம்பரம் பகுதியில் செல்போன் டவர்களில் பேட்டரி திருடிய கும்பல் போலீசாரிடம் சிக்கியுள்ளது. பிடிபட்ட 3 பேரிடம் இருந்து மொத்தம் 134 பேட்டரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பேட்டரிகள் திருட்டு

சிதம்பரம் அண்ணாமலைநகர் கே.ஆர்.எம்.நகரில் உள்ள ஒரு தனியார் செல்போன் டவரில் இருந்த 24 பேட்டரிகளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இது குறித்து அந்த நிறுவனத்தின் அதிகாரி கார்த்திக்(வயது 31) என்பவர் அண்ணாமலைநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்ராஜ், சப்–இன்ஸ்பெக்டர் கந்தசாமி, குற்றப்பிரிவு சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் தனசேகரன், தலைமை காவலர்கள் திலீப், நடராஜன் ஆகியோர் ரோந்து மேற்கொண்டனர். சிதம்பரம் அருகே பள்ளிப்படை தீபா நகரில் சென்றபோது, எதிரே வேகமாக வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் பேட்டரிகள் இருந்தது. இது பற்றி காரில் வந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் 3 பேரும் முன்னுக்குபின் முரணான தகவலை தெரிவித்தனர்.

3 பேரிடம் விசாரணை

இதையடுத்து 3 பேரையும் அண்ணாமலைநகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், சிதம்பரம் அருகே உள்ள பள்ளிப்படை கிராமம் ஜி.என்.நகரை சேர்ந்த அப்துல்சமது மகன் ஷமீர்அகமது(வயது 26), பெருங்காலூர் கிராமத்தை சேர்ந்த சக்கரவர்த்தி மகன் ராஜ்குமார்(25), நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தை சேர்ந்த கணேசன் மகன் விஜயராஜ்(25) ஆகியோர் என்பதும், 3 பேரும் சேர்ந்து சமீபத்தில் அண்ணாமலைநகரில் உள்ள தனியார் செல்போன் டவரில் 24 பேட்டரிகளை திருடியதும் தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், 3 பேரும் சேர்ந்து கடந்த சில நாட்களாக சிதம்பரம், கிள்ளை, அண்ணாமலைநகர் ஆகிய பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான செல்போன் டவர்களை பகலில் நோட்டமிட்டு, இரவு நேரங்களில் அங்கிருந்த பேட்டரிகளை திருடியதும், திருடிய பேட்டரிகள் அனைத்தும் பள்ளிப்படை கிராமத்தில் ஓரிடத்தில் மறைத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

134 பேட்டரிகள்– 9 கிலோ அலுமினியம் பறிமுதல்

இதையடுத்து 3 பேரையும் போலீசார், பள்ளிப்படை கிராமத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் பேட்டரிகள் மறைத்து வைத்திருந்த இடத்தை காண்பித்தனர். அங்கு போலீசார் சோதனை செய்தபோது, செல்போன் டவரில் பயன்படுத்தப்பட்ட 134 பேட்டரிகள் மற்றும் உருக்கிய நிலையில் 16 கிலோ அலுமினியம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மறைத்து வைத்திருந்த 134 பேட்டரிகள், 16 கிலோ அலுமினியம் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்