வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏ.டி.எம். கார்டு நம்பரை பெற்று பணம் மோசடி போலீசில் குவியும் புகார்கள்

பொதுமக்களை செல்போனில் தொடர்பு கொண்டு வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏ.டி.எம். கார்டு நம்பரை பெற்று பணம் மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்கள் குவிந்து வருகின்றன. ஏ.டி.எம். கார்டு நம்

Update: 2016-12-23 22:00 GMT

தேனி,

பொதுமக்களை செல்போனில் தொடர்பு கொண்டு வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏ.டி.எம். கார்டு நம்பரை பெற்று பணம் மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்கள் குவிந்து வருகின்றன.

ஏ.டி.எம். கார்டு நம்பர்

வங்கி ஏ.டி.எம். கார்டில் 16 இலக்க எண் இடம் பெற்று இருக்கும். இந்த எண்ணை பயன்படுத்தி இணையதளம் வழியாக பணப்பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இதற்கு இந்த 16 இலக்க எண் தெரிந்து இருந்தால் போதும். எனவே, வங்கியில் இருந்து பேசுவதாக கூறி யாரேனும் செல்போனில் தொடர்பு கொண்டு வாடிக்கையாளர்களிடம் கேட்டால் அவர்கள் தங்களின் வங்கிக் கணக்கு, ஏ.டி.எம். கார்டு சம்பந்தமான எந்த விவரங்களையும் தெரிவிக்க வேண்டாம் என்று வங்கிகள் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. போலீஸ் துறை சார்பிலும் இதற்கான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இருப்பினும், செல்போனில் தொடர்பு கொண்டு வங்கியில் இருந்து பேசுவதாக கூறும் மோசடி நபர்களிடம் பொதுமக்கள் தங்களின் வங்கி கணக்கு, ஏ.டி.எம். கார்டு விவரங்களை தெரிவித்து பணத்தை இழக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. தேனி மாவட்டத்திலும் இதுபோன்ற நூதன முறையிலான பணம் திருட்டு சமீப காலமாக அதிக அளவில் நடந்து வருகிறது.

குவியும் புகார்கள்

ஆண்டிப்பட்டி, கம்பம், கடமலைக்குண்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இதுபோன்ற மோசடி நபர்களால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்து வருகின்றனர். அன்றாடம் இதுபோன்ற புகார்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்த வண்ணம் உள்ளன. நேற்று ஆண்டிப்பட்டி அருகே உள்ள தர்மத்துப்பட்டியை சேர்ந்த ரெங்கசாமி (வயது 45) என்பவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் செய்தார்.

அதில், ‘வங்கி மேலாளர் பேசுவதாக கூறி ஒரு நபர் என்னை தொடர்பு கொண்டார். உங்கள் வங்கி ஏ.டி.எம். கார்டை மாற்றப் போகிறோம். கார்டு நம்பரை சொல்லுங்கள் என்றார். நானும் சொல்லிவிட்டேன். 2 ஏ.டி.எம். கார்டு நம்பரையும் சொல்ல விட்டேன். அதனை பயன்படுத்தி எனது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து விட்டார். ஒரு வங்கி கணக்கில் ரூ.11 ஆயிரம், மற்றொரு வங்கி கணக்கில் ரூ.13 ஆயிரம் என மொத்தம் ரூ.23 ஆயிரம் திருட்டு போய்விட்டது’ என்று கூறி இருந்தார்.

உடனடி புகார் அவசியம்

இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இயங்கி வரும் ‘சைபர் செல்’ பிரிவை சேர்ந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வங்கியில் இருந்து பேசுகிறோம் என்று கூறி யார் தொடர்பு கொண்டாலும் வங்கி கணக்கு, ஏ.டி.எம். கார்டு குறித்த எந்த தகவலையும் தெரிவிக்கக்கூடாது. அதன் மூலம் அவர்கள் இணைய வழி பணப்பரிவர்த்தனை செய்து பணத்தை திருடி விடுகின்றனர்.

இதுபோன்ற மோசடி நபர்களிடம் அறியாமையால் யாரேனும் தகவல்களை தெரிவித்து விட்டால், உடனே போலீசில் புகார் தெரிவிக்க வேண்டும். பணம் திருடப்பட்ட உடனே புகார் தெரிவித்து விட்டால், வங்கிக் கணக்கில் இருந்து இணைய வழி வர்த்தகத்தில் பயன்படுத்திய பணத்தை ஓரிரு நாட்களில் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க முடியும். தாமதமாக புகார்கள் வந்தால் பணத்தை பெறுவது மிகவும் சிரமம்’ என்றார்.

மேலும் செய்திகள்