ஆலங்குளம் அருகே 12 வயது சிறுவனை கடத்த முயன்றதால் பரபரப்பு 2 பேரை பிடித்து கிராம மக்கள் தாக்குதல்; போலீசிடம் ஒப்படைப்பு

12 வயது சிறுவனை கடத்திச் செல்ல முயன்றதாக 2 பேரை பிடித்து கிராம மக்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் 2 பேரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். சிறுவனை கடத்த முயற்சி நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பூலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்

Update: 2016-12-23 19:17 GMT

ஆலங்குளம்,

12 வயது சிறுவனை கடத்திச் செல்ல முயன்றதாக 2 பேரை பிடித்து கிராம மக்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் 2 பேரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சிறுவனை கடத்த முயற்சி

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பூலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயி. அவருடைய 3–வது மகன் மாரிச்செல்வம் (வயது 12). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 7–வது வகுப்பு படித்து வருகிறான்.

நேற்று இரவு 7.30 மணி அளவில் மாரிச்செல்வம் டியூசனுக்கு சென்றுவிட்டு, உள்ளூரில் உள்ள ஒரு கடைக்கு மருந்து வாங்க சென்றிருந்தான். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தான். சற்று ஒதுக்குப்புறமான பகுதியில் சென்ற போது திடீரென 2 பேர் சிறுவன் மாரிச்செல்வத்தை வழிமறித்துள்ளனர். அவனை குண்டுக்கட்டாக காட்டுப்பகுதிக்குள் தூக்கிச் செல்ல முயன்றதாகவும் கூறப்படுகிறது.

அப்போது சிலர் சாலையில் கும்பலாக வந்ததால் உடனே மாரிச்செல்வத்தை கீழே இறக்கி விட்டுவிட்டு, மர்ம நபர்கள் 2 பேரும் காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓடியதாகவும் தெரியவருகிறது.

2 பேர் பிடிபட்டனர்

இதற்கிடையே தன்னை கடத்த முயற்சி நடந்தது குறித்து ஊருக்குள் ஓடிச்சென்று அங்கிருந்தவர்களிடம் மாரிச்செல்வம் கூறினான். உடனடியாக பூலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் காட்டுப்பகுதிக்குள் தேடிச்சென்றனர். அங்கு பதுங்கி இருந்த 2 பேரை பிடித்தனர். சிறுவனை அவர்கள்தான் கடத்த முயன்றதாக கூறப்பட்டதால், அவர்கள் 2 பேரையும் கிராம மக்கள் கட்டி வைத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரியவந்தது. இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அந்த 2 பேரையும் மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். விசாரணையில், அவர்கள் நெல்லை மாவட்டம் ராயகிரியைச் சேர்ந்த இசக்கிமுத்து (26), மாரிமுத்து (40) என தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் கடந்த 2 நாட்களாக பூலாங்குளம் பகுதியில் சுற்றித்திரிந்துள்ளனர். சிலருக்கு ஜோதிடமும் பார்த்துள்ளனர்.

இந்த நிலையில் சிறுவனை கடத்த முயன்றது தொடர்பாக கிராம மக்களிடம் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதே போல் சிறுவன் மாரிச்செல்வத்திடமும் விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்