பவானிசாகர் அருகே வீட்டு முன்பு கட்டப்பட்டிருந்த ஆட்டை சிறுத்தைப்புலி கடித்துக்கொன்றது
பவானிசாகர் அருகே போக்கனாக்கரையில் வீட்டு முன்பு கட்டப்பட்டிருந்த ஆட்டை சிறுத்தைப்புலி கடித்துக்கொன்றது. எனவே சிறுத்தைப்புலியை கூண்டுவைத்து பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். மர்மவிலங்கு அட்டகாசம் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே கொத்தமங்கலத்தை அ;
பவானிசாகர்,
பவானிசாகர் அருகே போக்கனாக்கரையில் வீட்டு முன்பு கட்டப்பட்டிருந்த ஆட்டை சிறுத்தைப்புலி கடித்துக்கொன்றது. எனவே சிறுத்தைப்புலியை கூண்டுவைத்து பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
மர்மவிலங்கு அட்டகாசம்ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே கொத்தமங்கலத்தை அடுத்து போக்கனாக்கரை கிராமம் உள்ளது. இந்த ஊரைச்சேர்ந்த சிங்காரி, ஆறுமுகம் ஆகியோரது 2 ஆடுகள் அந்த பகுதியில் மேய்ந்து கொண்டு இருந்த போது மர்மவிலங்கு அந்த ஆடுகளை கடித்து சாப்பிட்டுவிட்டு பாதி உடலை ஓரிடத்தில் போட்டுவிட்டு சென்றது. அடுத்தடுத்த நாட்களில் இந்த சம்பவம் நடந்தது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்ததால் பவானிசாகர் வனத்துறையினர் 2 ஆடுகளை கொன்ற மர்மவிலங்கை கண்டுபிடிக்க கடந்த 20–ந் தேதி போக்கனாக்கரை பகுதியில் 5 இடங்களில் தானியங்கி கேமரா பொருத்தினார்கள். நேற்று முன்தினம் மேலும் 2 இடங்களில் தானியங்கி கேமரா பொருத்தப்பட்டது.
இதுதவிர மர்மவிலங்கு நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் துப்பாக்கி ஏந்தியபடி தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் அந்த பகுதி பொதுமக்களும் சேர்ந்து பகல் நேரத்தில் ரோந்து சுற்றி வருகிறார்கள். மர்ம விலங்கு நடமாட்டத்தை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு வெளியே அனுப்புவதில்லை. இரவு நேரத்தில் மர்மவிலங்கு பட்டிக்குள் புகுந்து கால்நடைகளை தூக்கி சென்று கொன்றுவிடும் என பயந்து வீட்டு முன்பு விடிய, விடிய தூங்காமல் காத்திருக்கின்றனர். ஆனால் மர்மவிலங்கு தானியங்கி கேமராவிலும், பொதுமக்கள் கண்ணிலும் சிக்காமல் இருந்து வந்தது.
ஆடு இறந்து கிடந்ததுஇந்த நிலையில் போக்கனாக்கரை பகுதியில் உள்ள அமராவதிகவுண்டர் என்பவரின் வீட்டு முன்பு கட்டப்பட்டிருந்த ஆடுகள் கத்தும் சத்தம் நேற்று காலை கேட்டது. உடனே அமராவதிகவுண்டர் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது ஒரு செம்மறியாட்டின் வயிற்று பகுதியில் ரத்தம் வழிந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தது. அந்த ஆட்டின் அருகே உள்ள வெள்ளாட்டின் உடலில் லேசான காயம் இருந்தது. சிறிது நேரத்தில் செம்மறியாடு இறந்துவிட்டது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். ஏதோ ஒரு மர்மவிலங்கு 2 ஆடுகளை கடித்துவிட்டு சத்தம் கேட்டதும் ஓடிச்சென்றது தெரியவந்தது.
சிறுத்தைப்புலி கொன்றதுஉடனே இதுகுறித்து பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்ததும் பவானிசாகர் வனச்சரகர் பெர்னார்ட் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று இறந்து கிடந்த ஆட்டின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அங்கு பதிவான விலங்கின் கால்தடத்தை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அந்த விலங்கின் கால்தடம் சிறுத்தைப்புலியின் கால்தடம் என்பது தெரியவந்தது. எனவே இதுவரை போக்கனாக்கரை பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற 2 ஆடுகளை கடித்து கொன்று சாப்பிட்டது சிறுத்தைப்புலிதான் என்பதும் தெரியவந்துள்ளது.
கூண்டு வைக்க முடிவுஇதனால் பொதுமக்களின் பீதி மேலும் அதிகரித்துள்ளது. எந்தவேலைக்கும் செல்லாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கிறார்கள். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றிய தகவல் அறிந்தததும் கோபி சப்–கலெக்டர் கிருஷ்ணன் உண்ணி போக்கனாக்கரைக்கு சென்று இறந்து கிடந்த ஆட்டின் உடலை பார்வையிட்டார். பின்னர் அவர் மாவட்ட வன அதிகாரி அருண்லாலிடம், 3 ஆடுகளை கொன்ற சிறுத்தைப்புலியை பிடிக்க கூண்டு வைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அங்கு வந்த பொதுமக்களும் வனத்துறையினரிடம், ‘அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைப்புலியை பிடிக்க உடனடியாக கூண்டு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து போக்கனாக்கரை பகுதியில் கூண்டு வைக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.