ஆறுமுகநேரி தனியார் நிதிநிறுவனத்தில் ரூ.7½ லட்சம் கையாடல்; கிளைமேலாளர் தலைமறைவு

ஆறுமுகநேரியில், ரூ.7½ லட்சத்தை கையாடல் செய்து கொண்டு தலைமறைவான தனியார் நிதி நிறுவன கிளை மேலாளரை போலீசார் தேடி வருகின்றனர். மகளிர் குழுக்களுக்கு கடன் ஆறுமுகநேரி எல்.எப். ரோட்டில் தனியார் நிதி நிறுவனம் வாடகை கட்டிடத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக செயல்

Update: 2016-12-23 19:45 GMT

ஆறுமுகநேரி,

ஆறுமுகநேரியில், ரூ.7½ லட்சத்தை கையாடல் செய்து கொண்டு தலைமறைவான தனியார் நிதி நிறுவன கிளை மேலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

மகளிர் குழுக்களுக்கு கடன்

ஆறுமுகநேரி எல்.எப். ரோட்டில் தனியார் நிதி நிறுவனம் வாடகை கட்டிடத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு, தூத்துக்குடி தாளமுத்து நகரை அடுத்த எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த காட்வின் மகன் நிசாந்த் (வயது 26) கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிதி நிறுவனத்தின் மூலம் ஆறுமுகநேரி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் இருந்து தவணை முறையில் வட்டியுடன் அசல் தொகை திரும்ப பெறப்படுகிறது. நிதி நிறுவன கிளை மேலாளர் நிசாந்த், தினமும் ஒவ்வொரு பகுதியாக சென்று, கடன் தொகையை வசூலித்து வருவது வழக்கம்.

ரூ.7½ லட்சத்துடன் தலைமறைவு

நிசாந்த், கடந்த மாதம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 444 பேரிடம் இருந்து ரூ.7 லட்சத்து 47 ஆயிரத்து 150 கடன் தொகையை வசூலித்தார். மேலும், அவர் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடம் இருந்த பாஸ் புத்தகத்தையும் வாங்கி சென்றார். பின்னர் அவர் வசூலித்த பணத்தை நிதி நிறுவனத்தில் செலுத்தாமல் கையாடல் செய்துவிட்டு தலைமறைவானார்.

இதுகுறித்து நிதி நிறுவன வட்டார மேலாளர் முத்துராமலிங்கம் அளித்த புகாரின்பேரில், ஆறுமுகநேரி போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான நிதி நிறுவன மேலாளரை தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்