தூத்துக்குடி ரெயிலில் தவறவிட்ட வியாபாரியின் ரூ.4½ லட்சம் தங்கம், பணம் மீட்பு ரெயில்வே போலீசாருக்கு பயணிகள் பாராட்டு

தூத்துக்குடி ரெயிலில் தவறவிட்ட ரூ.4½ லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை ரெயில்வே போலீசார் மீட்டு சம்மந்தப்பட்ட வியாபாரியிடம் ஒப்படைத்தனர். முத்துநகர் எக்ஸ்பிரஸ் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்

Update: 2016-12-23 18:39 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி ரெயிலில் தவறவிட்ட ரூ.4½ லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை ரெயில்வே போலீசார் மீட்டு சம்மந்தப்பட்ட வியாபாரியிடம் ஒப்படைத்தனர்.

முத்துநகர் எக்ஸ்பிரஸ்

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு வந்தது. நேற்று காலையில் அந்த ரெயில் தூத்துக்குடி ரெயில் நிலையம் வந்தடைந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்ற பின்னர், ரெயில்வே போலீசார் ஒவ்வொரு பெட்டியாக வழக்கமான சோதனை நடத்தினர்.

நகைகள், பணம் மீட்பு

அப்போது ஒரு பெட்டியில் சூட்கேஸ் ஒன்று அனாதையாக கிடந்தது. முதலில் அந்த சூட்கேஸை எடுத்து சோதனை நடத்த போலீசார் யோசனை செய்தனர். சிறிது நேர ஆலோசனைக்கு பின்னர் போலீசார் அந்த சூட்கேஸை பாதுகாப்பாக எடுத்து திறந்து பார்த்தனர். அந்த சூட்கேசில் ரூ.4½ லட்சம் மதிப்பிலான 19½ பவுன் தங்க நாணயங்கள், ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் பல்வேறு அடையாள அட்டைகளும் இருந்தன.

சென்னை வியாபாரி

அந்த சூட்கேசில் இருந்த அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டு இருந்த செல்போன் எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டு பேசினர். மறுமுனையில் செல்போனில் பேசிய நபர்,‘ தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் சவுக்கை தெருவைச் சேர்ந்த சுல்தான் மகன் ரியாஸ் அகமது(வயது39) என்றும், சென்னை சூளைமேட்டில் வியாபாரம் செய்து வருவதாகவும், சூட்கேசை ரெயிலில் தவறவிட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

போலீசார் ஒப்படைத்தனர்

உடனடியாக அவரை ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்தனர். பதறி அடித்து ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு வந்த அவரிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில்,‘ காயல்பட்டினத்தில் ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டு வந்ததாகவும், தூக்க அசதியில் அந்த சூட்கேசை தவறவிட்டு சென்றதாகவும் தெரிவித்தார்.

பயணிகள் பாராட்டு

ரெயில்வே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சூட்கேசுடன் தங்க நகை மற்றும் பணத்தை ரியாஸ் அகமதுவிடம் ஒப்படைத்தனர். ரெயிலில் தவறவிட்ட நகை, பணத்தை மீட்டு ஒப்படைத்த ரெயில்வே போலீசாருக்கு அவர் நன்றி தெரிவித்தார். ரெயில்வே போலீசாரின் இந்த செயலுக்கு பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்