பெரியதச்சூரில் தானிய உலர்களங்களை இடித்ததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

பெரியதச்சூரில் தானிய உலர்களங்களை இடித்ததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முற்றுகை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை திண்டிவனம் தாலுகா பெரியதச்சூரை சேர்ந்த விவசாயிகள் திரண்டு வந்தனர

Update: 2016-12-23 22:30 GMT

விழுப்புரம்,

பெரியதச்சூரில் தானிய உலர்களங்களை இடித்ததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை திண்டிவனம் தாலுகா பெரியதச்சூரை சேர்ந்த விவசாயிகள் திரண்டு வந்தனர். திடீரென இவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவர்களை மாவட்ட கலெக்டரிடம் அழைத்துச்சென்றனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

எங்கள் கிராமத்தில் பயிர் செய்யும் தானியங்களை உலர வைப்பதற்கு வசதியாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் 2 தானிய உலர்களங்கள் கட்டிக்கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 11–ந் தேதி தனிநபர்கள் சிலர் அந்த 2 தானிய உலர்களங்களையும் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றி விட்டனர். இதுபற்றி கேட்டதற்கு பெரியதச்சூரில் புதிய போலீஸ் நிலைய கட்டிடம் கட்டுவதற்காக இடித்ததாக தெரிவிக்கின்றனர். ஆனால் அதற்காக இடிக்கப்பட்டதாக தெரியவில்லை. யாரோ வேண்டுமென்றே இந்த தானிய உலர்களங்களை இடித்துள்ளனர்.

தற்போது வேளாண் பயிர்கள் அறுவடை செய்யப்பட உள்ள நிலையில் உலர்களங்கள் இடிக்கப்பட்டுள்ளதால் நாங்கள் சிரமப்பட வேண்டி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதுடன், மீண்டும் அதே இடத்தில் தானிய உலர்களங்களை அமைக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் சுப்பிரமணியன் கூறியதை அடுத்து, விவசாயிகள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்