பண்ருட்டி அருகே பயங்கரம் 10–ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி படுகொலை குற்றவாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்
பண்ருட்டி அருகே 10–ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டான். அவனை படுகொலை செய்த குற்றவாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:– 10–ம் வகுப்பு மாணவன் கடலூர்;
பண்ருட்டி,
பண்ருட்டி அருகே 10–ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டான். அவனை படுகொலை செய்த குற்றவாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
10–ம் வகுப்பு மாணவன்கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிக்குப்பம் புதுகாலனியை சேர்ந்தவர் சங்கர் என்கிற ஜெயசங்கர்(வயது 37). இவருடைய மனைவி ராஜகுமாரி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளார்.
ஜெய்சங்கர் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் ஜெயபிரகாஷ்(வயது 16). இவன், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தான்.
ரத்தவெள்ளத்தில் கிடந்தான்இந்த நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் பால் வாங்குவதற்காக ஜெயபிரகாஷ், அதே கிராமத்தில் உள்ள பழனியப்பன் என்பவருடைய மளிகை கடைக்கு சென்றான். ஆனால் வெகுநேரமாகியும், அவன் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவனது பெற்றோர், அந்த கடைக்கு சென்றனர். அப்போது அந்த கடையின் முன்பு ஜெயபிரகாஷ் ரத்தவெள்ளத்தில் கிடந்தான்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர், ஜெயபிரகாசை மீட்டு சிகிச்சைக்காக நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே ஜெயபிரகாஷ் இறந்து விட்டதாக கூறினர். இது குறித்த தகவலின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார், என்.எல்.சி. பொது மருத்துவமனைக்கு விரைந்து சென்று, மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
கத்தியால் குத்தி கொலைஇதனை தொடர்ந்து முத்தாண்டிக்குப்பம் போலீசார், புதுகாலனிக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பால் வாங்க சென்ற ஜெயபிரகாசுக்கும், மளிகைக்கடை உரிமையாளரான பழனியப்பன் என்பவருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பழனியப்பன் கடையில் வைத்திருந்த கத்தியால், ஜெயபிரகாசை கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளார். இதனால் ஜெயபிரகாசின் கழுத்து, உடலில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்திருப்பது தெரியவந்ததது.
புதுகாலனி மக்களிடம் போலீசார் விசாரணை நடத்தியது பற்றி அறிந்ததும், பழனியப்பன் கடையை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சாலை மறியல்இதற்கிடையில் இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் ஜெயபிரகாசின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் மருத்துவமனையின் முன்பு உள்ள சென்னை–கும்பகோணம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ஜெயபிரகாசை கொலை செய்த பழனியப்பனை கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன், இன்ஸ்பெக்டர் கங்காதரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட ஜெயபிரகாசின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், மாணவன் ஜெயபிரகாசை கொலை செய்த பழனியப்பன் தலைமறைவாகிவிட்டார். அவரை தேடி வருகிறோம். விரைவில் பிடித்து விடுவோம் என்று கூறினர். இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
மளிகை கடைக்காரருக்கு வலைவீச்சுஇதனை தொடர்ந்து ஜெயசங்கர் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனியப்பனை வலைவீசி தேடி வருகின்றனர். 10–ம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் முத்தாண்டிக்குப்பம் புதுகாலனி பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
செல்போன் டவரில் ஏறி 4 பேர் போராட்டம்10–ம் வகுப்பு மாணவன் ஜெயபிரகாசை கொலை செய்த பழனியப்பனை கைது செய்யக்கோரி பண்ருட்டி அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 4 பேர் திடீரென அங்குள்ள 110 அடி உயரமுள்ள செல்போன் டவரில் ஏறினர். சுமார் 60 அடி உயரத்தில் சென்றதும், 4 பேரும் நின்றுகொண்டு பழனியப்பனை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கையை கூறி கோஷமிட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்க கூறினர். இதையடுத்து 4 பேரும் கீழே இறங்கினர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.