கடலூரில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை ரூ.2 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்த 6 பேரிடம் விசாரணை

கடலூரில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது வங்கி கணக்கில் ரூ.2 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்த 6 பேரிடம் விசாரணை செய்தனர். அதிகாரிகள் சோதனை கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் புழக்கத

Update: 2016-12-23 22:45 GMT

கடலூர்,

கடலூரில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது வங்கி கணக்கில் ரூ.2 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்த 6 பேரிடம் விசாரணை செய்தனர்.

அதிகாரிகள் சோதனை

கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திரமோடி கடந்த நவம்பர் மாதம் 8–ந் தேதி அறிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள குறிப்பிட்ட பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றினர். பலர் தங்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்தனர்.

இந்த நிலையில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து சி.பி.ஐ., வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப்பிரிவுத்துறை அதிகாரிகள் வங்கிகள் மற்றும் தொழில் அதிபர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

சேலத்தில் ரூ.150 கோடி டெபாசிட்

அந்த வகையில் சேலத்தில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்னர் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு ரூ.150 கோடிக்கு பழைய ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடலூர் வங்கியிலும் நேற்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அது பற்றிய விவரம் வருமாறு:–

மத்திய கூட்டுறவு வங்கி

கடலூர் பீச்ரோட்டில் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த வங்கிக்கு மாவட்டம் முழுவதும் 30 வங்கி கிளைகளும், 167 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும் உள்ளன.

பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட கடந்த நவம்பர் 8–ந் தேதிக்கு பிறகு இங்கு சிலர் ரூ.2 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்து இருப்பதாகவும், பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பல கோடிக்கு மேல் பழைய ரூபாய் நோட்டுகள் வைப்புத்தொகையாக பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதை வருமானவரித்துறை மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

அமலாக்கப்பிரிவினர் சோதனை

இந்த நிலையில் அமலாக்கப்பிரிவு துணை இயக்குனர் ராஜசேகர் மற்றும் லோமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று காலையில் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் வங்கியில் உள்ள அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்தனர்.

அப்போது கடந்த நவம்பர் மாதம் 8–ந் தேதிக்கு பின்னர் ரூ.2 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்த வாடிக்கையாளர்களிடம் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள், வழங்கப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகள், புதிதாக தொடங்கப்பட்ட வங்கி கணக்குகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

பழைய ரூபாய் நோட்டுகள்

பின்னர் வங்கியின் பாதுகாப்பு பெட்டக அறையில் மூட்டை மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை சரிபார்த்தனர். இதையடுத்து மத்திய கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சந்திரசேகரன் அலுவலகத்துக்கு சென்று அவரிடமும் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த ஆய்வு குறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறும்போது, பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்னர் கடந்த நவம்பர் மாதம் 10–ந் தேதி முதல் 14–ந் தேதி வரை 5 நாட்கள் பொதுமக்களிடம் இருந்து ரூ.51 கோடிக்கு பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் டெபாசிட்டாக பெறப்பட்டன. அந்த பணத்தை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் ரூ.2 லட்சத்துக்கு மேல் பணம் டெபாசிட் செய்த 6 பேரையும் வரவழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர் என்றார்.

மேலும் செய்திகள்