வேலூர் சத்துவாச்சாரியில் விபத்துக்குள்ளான வேனில் இருந்து சிதறிய ரூ.1¾ லட்சம் நோட்டுகள் போலீசார் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்

வேலூர் சத்துவாச்சாரியில் லாரி மீது மோதி விபத்துக்குள்ளான வேனில் இருந்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் நோட்டுகள் ரோட்டில் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ரூபாய் நோட்டுகளை போலீசார் மீட்டு உரிமையாளரை வரவழைத்து ஒப்படைத்தனர். பிஸ்கெட் வினியோகம் கிருஷ்ணகிரி மா

Update: 2016-12-23 20:00 GMT

வேலூர்

வேலூர் சத்துவாச்சாரியில் லாரி மீது மோதி விபத்துக்குள்ளான வேனில் இருந்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் நோட்டுகள் ரோட்டில் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ரூபாய் நோட்டுகளை போலீசார் மீட்டு உரிமையாளரை வரவழைத்து ஒப்படைத்தனர்.

பிஸ்கெட் வினியோகம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள ஒரு பிஸ்கெட் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பிஸ்கெட்டுகள் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் வேன் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு வேனில் பிஸ்கெட்டுகள் வினியோகிக்கப்படும்போது அதற்கான பணத்தை சம்பந்தப்பட்ட கடைகளில் இருந்து ஊழியர்கள் வசூலிப்பார்கள். அதன்படி காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள கடைகளுக்கு நேற்று முன்தினம் ஒரு வேனில் ஊழியர்கள் பிஸ்கெட்டுகளை வினியோகிப்பதற்காக சென்றனர்.

வேனை டிரைவர் ராஜாமணி (வயது 25) என்பவர் ஓட்டிச்சென்றார். அவருடன் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் வடமாநிலத்தை சேர்ந்த ஜப்பால் என்பவரும் சென்றிருந்தார். அவர்கள் பிஸ்கெட்டுகளை கடைகளுக்கு வினியோகம் செய்து விட்டு பணத்தை வசூல் செய்துகொண்டு நேற்று காலை ஒசூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

ரோட்டில் சிதறிய ரூபாய் நோட்டுகள்

அந்த வேன் வேலூர் சத்துவாச்சாரி காந்திநகரில் உள்ள மேம்பாலத்தில் வந்துகொண்டிருந்தது. அப்போது முன்னால் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக லாரியின் பின்பக்கத்தில் வேன் பயங்கரமாக மோதியது. இதில் வேனின் முன்பகுதி நொறுங்கியது. வேனை ஓட்டிச்சென்ற டிரைவர் ராஜாமணி, அவருடன் இருந்த ஜப்பால் ஆகிய இருவரும் காயம் அடைந்தனர்.

லாரி மீது வேன் மோதிய வேகத்தில் வேனில் இருந்து ரூபாய் நோட்டுகள் ரோட்டில் விழுந்து சிதறியது. சாலை முழுவதும் ரூபாய் நோட்டுகளாக கிடந்ததை பார்த்து அந்தவழியாக வந்தவர்கள் வாகனங்களை நிறுத்தி வேடிக்கை பார்த்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் ரோட்டில் கிடந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்தனர். அதில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் இருந்தது.

டிரைவர் கொடுத்த தகவலின்பேரில் நிறுவனத்தின் உரிமையாளரை வரவழைத்து அவரிடம் பணத்தை கொடுத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரோட்டில் ரூபாய் நோட்டுகள் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்