நீர்நிலைகளின் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
நீர்நிலைகளின் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று குறைதீர்வு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் மு.வட
திருவண்ணாமலை
நீர்நிலைகளின் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று குறைதீர்வு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பழனி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகள் குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்தனர்.
அப்போது விவசாயிகள் பேசியதாவது:–
வார்தா புயல் தாக்கத்தால் திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழை பயிரிட்ட விவசாயிகள் மிகவும் நஷ்டமடைந்துள்ளனர். அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகள் ஏரியில் மண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும்.
ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர் ஆதாரமாக விளங்கும், ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் பல தற்போது வறண்டு காணப்படுகிறது. இதனால் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் நீர்நிலைகளுக்கு வரும் கால்வாயை பலர் ஆக்கிரமித்து உள்ளனர்.
மேலும் ஏரிகளை பராமரிக்காமல் உள்ளதால் பல ஏரிகளின் நீர் வழித்தடம் செடி, கொடிகள் வளர்ந்நு ஆக்கிரமித்துள்ளது. இந்த நீர்நிலைகளை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களை தூர்வார வேண்டும்.
விலங்குகளால் பாதிப்புவிலங்குகளான பன்றிகள், குரங்குகள், யானைகளால் விவசாயிகள் பலர் பாதிக்கின்றனர். அவர்களுக்கு உரிய இழப்பீடும், வனத்துறையின் மூலம் வன விலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆரணி அரசு மருத்துவமனையில் ஸ்கேன் வசதி கொண்டு வர வேண்டும். செங்கம் ஸ்டேட் வங்கியில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. அங்கு பணிகளை விரைந்து முடிக்க ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டும். செங்கம் தாலுகாவில் ஆற்றில் மணல் கொள்ளை நடக்கிறது. இதனை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.
100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிபவர்களை ஏரியில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபடுத்த வேண்டும். மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். பல இடங்களில் தண்ணீர் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது.
இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள்.
ரேஷன் கடைகளில்...கூட்டத்தில் புருஷோத்தமன் என்ற விவசாயி ரூ.10 நாணயங்களை மாலையாக கோர்த்து கலெக்டரிடம் காண்பித்து தனது கோரிக்கை குறித்து கூறுகையில், இந்தியன் வங்கியில் ரூ.10 நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். இந்த நாணயங்கள் செல்லுமா? என்று தெரிவிக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த வங்கி அதிகாரி ரூ.50 பைசா நாணயத்தில் இருந்து 10 ரூபாய் நாணயங்கள் வரை செல்லும். அருகில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்று மாற்றிக் கொள்ளலாம் என்றார்.
இதையடுத்து பலராமன் என்ற விவசாயி பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பல ரேஷன் கடைகளில் வழங்கும் அரிசி மற்றும் சர்க்கரை தரமற்றதாகவும், புழுக்கள், தூசிகள் நிறைந்ததாகவும் உள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை 4–ம் எண் கொண்ட ரேஷன் கடை உதாரணம். இங்கு வாங்கும் பொருட்களை கொண்டு சமையல் செய்ய முடியவில்லை. மேலும் குழந்தைகளுக்கு வழங்கும் பாலில் ரேஷன் சர்க்கரையை கலந்து வழங்க முடியாத அளவுக்கு தூசி மற்றும் அழுக்குகள் நிறைந்து காணப்படுகிறது என்றார்.
மேலும் அவர் கையில் கொண்டு வந்த ரேஷன் அரிசி மற்றும் சர்க்கரையை அதிகாரிகளிடம் காண்பித்தார்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே பேசியதாவது:–
நடவடிக்கை எடுக்கப்படும்இங்கு விவசாயிகள் அளித்த குறைகள் மற்றும் கோரிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சில கோரிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
விவசாயிகள் ஏரி மண்ணை பயன்படுத்தும் விதமாக மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை ஏரிகள், பஞ்சாயத்து ஏரிகள் கணக்கெடுக்கப்பட்டு அதில் எந்த ஏரிகளில் மண் எடுக்க வேண்டும் என்று ஆய்வு செய்யப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் ஆணை வந்தவுடன், விவசாயிகள் ஏரி மண்ணை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். அவ்வாறு ஏரி மண்ணை எடுக்கும் போது அதிகாரிகளின் அறிவுரைப்படி மண் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கூட்டம் ஆரம்பிக்கும் போது மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவிற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.