கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற கணவன்– மனைவி கைது

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற கணவன்– மனைவி கைது

Update: 2016-12-22 23:00 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.

பண மோசடி

கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 45). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சண்முகத்தாய் (40). இவர்களிடம், கோவில்பட்டியை அடுத்த ஆலம்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியம், அவருடைய தம்பி சந்திரன், தாயார் சுந்தரம்மாள் ஆகிய 3 பேரும் சேர்ந்து நிலம் வாங்கி தருவதாக கூறி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.6 லட்சத்து 40 ஆயிரம் வாங்கினர். பின்னர் அவர்கள் நிலம் வாங்கி தராமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

போலீசில் புகார்

இதுகுறித்து மாணிக்கம், சண்முகத்தாய் ஆகிய 2 பேரும் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து கடந்த 9–1–2014 அன்று கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் ஆரோக்கியம், சந்திரன், சுந்தரம்மாள் ஆகிய 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ஒரு மாதத்தில் பணத்தை திருப்பி தருவதாக ஆரோக்கியம் உள்ளிட்ட 3 பேரும் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனராம்.

தீக்குளிக்க முயற்சி

அவர்கள் 3 பேரும் பணத்தை திருப்பி கொடுக்காமல் மீண்டும் ஏமாற்றி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் மனமுடைந்த மாணிக்கமும், சண்முகத்தாயும் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலையில் வந்தனர்.

உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் சண்முகத்தாய் திடீரென்று தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றினார். மாணிக்கமும் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்ற முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று, மாணிக்கம், சண்முகத்தாயை பிடித்து, அவர்களிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த 2 பேர் மீதும் தண்ணீரை ஊற்றினர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

தம்பதி கைது

 உதவி கலெக்டர் டாக்டர் கண்ணபிரான் அலுவலக பணிக்காக வெளியே சென்றிருந்தார். இதை தொடர்ந்து மாணிக்கம் தம்பதியர் கோரிக்கை மனுவை உதவி கலெக்டர் அலுவலக எழுத்தரிடம் வழங்கினர். பின்னர், தற்கொலைக்கு முயன்றதாக 2 பேரையும் கோவில்பட்டி கிழக்கு போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்