பவானிசாகர் அருகே 2 ஆடுகளை மர்ம விலங்கு கொன்றது: மேலும் 5 இடங்களில் தானியங்கி கேமரா பொருத்தப்பட்டது

பவானிசாகர் அருகே 2 ஆடுகளை மர்ம விலங்கு கொன்றது: மேலும் 5 இடங்களில் தானியங்கி கேமரா பொருத்தப்பட்டது

Update: 2016-12-22 23:00 GMT
பவானிசாகர்,

பவானிசாகர் அருகே 2 ஆடுகளை கொன்ற மர்மவிலங்கை கண்டுபிடிக்க மேலும் 5 இடங்களில் தானியங்கி கேமரா பொருத்தப்பட்டது.

மர்மவிலங்கு அட்டகாசம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே கொத்தமங்கலத்தை அடுத்து உள்ள போக்கனாக்கரை கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரி. அவருடைய மகன் ஸ்ரீதர் (வயது 22). இவர் கடந்த 19-ந் தேதி மாலை வனப்பகுதியில் ஆடுகளை மேய்த்து கொண்டு இருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த மர்மவிலங்கு ஒன்று ஆட்டை கவ்வியபடி தூக்கி சென்றது. பின்னர் ஆட்டை சாப்பிட்டுவிட்டு பாதி உடலை மட்டும் அங்கிருந்து சிறிது தூரத்தில் போட்டுவிட்டு சென்றது. எந்த வகையான மர்மவிலங்கு ஆட்டை கொன்றது என்பதை கண்டுபிடிக்க வனப்பகுதியில் 2 இடங்களில் வனத்துறையினர் தானியங்கி கேமரா பொருத்தினர். மர்மவிலங்கை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

ஆனால் நேற்று முன்தினம் மர்மவிலங்கு மீண்டும் அதே பகுதியில் ஆறுமுகம் என்பவர் தென்னந்தோப்பில் மேய்ந்து கொண்டு இருந்த செம்மறி ஆட்டை கடித்து கொன்று சாப்பிட்டுவிட்டு, பாதி உடலை மட்டும் போட்டுவிட்டு சென்றது. இதனால் அந்த மர்ம விலங்கு சிறுத்தையாக இருக்கலாம் என்று பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து பவானிசாகர் வனத்துறையினர் அங்கு சென்று அந்த இடத்தில் பதிவான மர்மவிலங்கின் கால்தடத்தை ஆய்வு செய்தனர்.

மேலும் 5 கேமராக்கள்

மர்ம விலங்கு நடமாட்டத்தை தொடர்ந்து போக்கனாக்கரையை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விடாமல் பட்டியிலேயே அடைத்து வைத்துள்ளனர். மேலும் மர்மவிலங்கு இரவு நேரத்தில் பட்டிக்குள் புகுந்து ஆடு, மாடுகளை அடித்து கொன்றுவிடாமல் இருக்க பொதுமக்கள் தூங்காமல் விடிய, விடிய காவல் காத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆடுகளை கொன்ற மர்மவிலங்கை கண்டுபிடிக்க போக்கானாக்கரை அருகே உள்ள வனப்பகுதியில் மேலும் 5 இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று பவானிசாகர் வனத்துறையினருக்கு சத்தியமங்கலம் மாவட்ட வன அதிகாரி அருண்லால் உத்தரவிட்டார். அதன்பேரில் வனச்சரகர் பெர்னார்ட் மற்றும் வனத்துறையினர் நேற்று காலை வனப்பகுதிக்கு சென்று 5 இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தினார்கள்.

கூண்டு வைக்கப்படும்

மேலும் மர்மவிலங்கு நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் துப்பாக்கி ஏந்தியபடி தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் அந்த பகுதி பொதுமக்களும் சேர்ந்து பகல் நேரத்தில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

இதுகுறித்து வனச்சரகர் பெர்னார்ட் கூறும்போது, போக்கனாக்கரை பகுதியில் 2 ஆடுகளை கொன்ற மர்மவிலங்கை கண்டுபிடிக்க வனப்பகுதியில் மேலும் 5 இடங்களில் தானியங்கி கேமரா பொருத்தியுள்ளோம். இதுவரை மொத்தம் 7 இடங்களில் தானியங்கி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த விலங்கும் கேமராவில் சிக்கவில்லை. கேமராவில் பதிவாகும் விலங்கின் நடமாட்டத்தை வைத்து அந்த விலங்கை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

மேலும் செய்திகள்