சீராக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் திடீர் முற்றுகை

சீராக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் திடீர் முற்றுகை

Update: 2016-12-22 22:45 GMT
ஈரோடு,

சீராக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் திடீர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காலிக்குடங்களுடன் முற்றுகை

கோபிசெட்டிபாளையம் அடுத்து கலிங்கியம் அருகே உள்ளது புதுவள்ளியாம்பாளையம் மேடு. இந்த பகுதியை சேர்ந்த 150 பெண்கள் உள்பட 200 பேர் காலிக்குடங்களுடன் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தின் முதல் மாடிக்கு சென்று அங்கு அமர்ந்து காலிக்குடங்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கோபி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி பசீர் அகமது வந்தார். அப்போது பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு ஒரு மனு கொடுத்தனர்.

சீராக குடிநீர் வழங்கவேண்டும்

அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

கலிங்கியம் ஊராட்சியில் உள்ள புதுவள்ளியாம்பாளையம் மேடு பகுதியில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் கடந்த 2 மாதங்களாக சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் தண்ணீர் பிடிப்பதற்காக சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிக்கு செல்கிறோம். அங்கும் குடிநீர் பற்றாக்குறை உள்ளதால் அந்த பகுதியில் உள்ளவர்கள் தண்ணீர் எடுக்க தடை விதிக்கிறார்கள்.

புதுவள்ளியாம்பாளையம் மேட்டில் ஒரு லட்சம் மற்றும் 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட 2 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் உள்ளன. இந்த 2 மேல்நிலை தொட்டிகளுக்கும் ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வந்து கொண்டு இருந்தது. தற்போது ஆழ்துளை கிணறு வற்றிவிட்டதால் கடந்த 2 மாதங்களாக குடிநீர் பற்றாக்குறை மிகவும் கடினமாக உள்ளது. இதுதவிர கலிங்கியம் ஊராட்சி அலுவலகத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து எங்கள் கிராமத்துக்கு ஆற்று குடிநீர் தாழ்வான பகுதிகளுக்கு மட்டும் வருகிறது. எங்கள் கிராமம் மேட்டுப்பகுதியாக இருப்பதால் தண்ணீர் வருவதில்லை. எனவே எங்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறி இருந்தார்கள்.

ஆற்றுநீர்

அப்போது வட்டார வளர்ச்சி அதிகாரி பசீர் அகமது, ‘உங்கள் பகுதியில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நீங்கள் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள்’ என்றார். ஆனால் முற்றுகையிட்டவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல் அங்கிருந்து கீழே வந்து கலெக்டர் அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.

அதன்பின்னர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மேனகா தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது அவர்கள், ‘எங்களுக்கு ஆற்றுநீர் வழங்க உடனடியாக பணிகள் நடந்தால் மட்டுமே நாங்கள் இங்கிருந்து கலைந்து செல்வோம்’ என்றனர்.

உறுதி செய்த பின்னர்...

அதற்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் மேனகா, ‘உங்கள் பகுதி மேடாக இருப்பதால் தான் தண்ணீர் வினியோகம் செய்ய முடியவில்லை. தனி மோட்டார் வைத்து உங்கள் பகுதியில் உள்ள மேல்நிலை தொட்டி நிரப்பப்பட்டு தண்ணீர் வினியோகம் செய்ய தற்போது பணிகள் நடந்து வருகிறது.’ என்றார்.

அதன்பின்னர் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ளவர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பணிகள் நடப்பதை உறுதி செய்தபின்னர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்