சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறை அரியலூர் மகிளா கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறை அரியலூர் மகிளா கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

Update: 2016-12-22 23:00 GMT
அரியலூர்,

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

சிறுமி பாலியல் பலாத்காரம்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகேயுள்ள மாதாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைபிள்ளை. இவரது மகன் ராஜ் என்கிற அடைக்கலசாமி (வயது 29). கூலித்தொழிலாளியான இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 19-ந் தேதி அப்பகுதியில் சென்று கொண்டிருந்த 12 வயது சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

மேலும் இதுகுறித்து வெளியில் யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவேன், என அச்சிறுமியை அடைக்கலசாமி மிரட்டியுள்ளார். அதன்பிறகு அந்த சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவ பரிசோதனைகள் செய்தபோது, சிறுமியின் உடலில் காயம் இருந்தது. இதுகுறித்து அச்சிறுமியிடம் கேட்டபோது, நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதாள்.

வழக்கு

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அச்சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அடைக்கலசாமியை கைது செய்தனர். மேலும் அவர் மீது அரியலூர் மகிளா கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

30 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லிங்கேஷ்வரன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், “குற்றம் சுமத்தப்பட்ட அடைக்கலசாமி மீது காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ததன் மூலம் ஜாமீன் பெற்று அடைக்கலசாமி வெளியே வந்தார். இந்த நிலையில் தான் மீண்டும் மாதாபுரம் கிராமத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு கொலை செய்து விடுவதாகவும் அடைக்கலசாமி மிரட்டியிருக்கிறார். இதனை கருத்தில் கொண்டு குற்றம் சுமத்தப்பட்ட அடைக்கலசாமிக்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், ஆள் கடத்தலுக்கு 5 ஆண்டுகள் சிறையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், வலுக்கட்டாயமாக அழைத்து சென்றதுக்கு 6 மாதம் சிறையும், ரூ.500 அபராதமும், கொலை மிரட்டலுக்கு 1 வருடம் சிறையும்,ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த தண்டனைகளை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். அதனால் அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், மொத்தம் ரூ.7,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் அடைக்கலசாமியை வேனில் அழைத்துச்சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்