திருமானூர் அருகே சாலையோரங்களில் நிற்கும் பட்டுப்போன மரங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உடனடியாக அகற்ற வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை

திருமானூர் அருகே சாலையோரங்களில் நிற்கும் பட்டுப்போன மரங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உடனடியாக அகற்ற வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை;

Update:2016-12-23 04:15 IST
திருமானூர்,

திருமானூர் அருகே சாலையோரங்களில் நிற்கும் பட்டுப்போன மரங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அவைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சாலை விரிவாக்கப் பணி

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள திருமழபாடி- கீழப்பழுவூர் நெடுஞ்சாலை கடந்த சில வருடங்களுக்கு முன்பு விரிவு படுத்தப்பட்டது. இந்த சாலை வழியாகத்தான் திருச்சிக்கு அதிக அளவிலான பஸ்கள் செல்கின்றன. அதுமட்டுமின்றி லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், பள்ளி வாகனங்கள் அதிக அளவில் செல்கின்றன. இதனால் இந்த சாலை எப்போதுமே பரபரப்பாகவே காணப் படும்.

இந்த சாலையின் இருபுறமும் அதிக அளவிலான மரங்கள் உள்ளன. இதில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மரங்கள் பட்டுப்போய் நிற்கின்றன. இதிலும் ஒருசில மரங்கள் காற்று அடிக்கும் போது கீழே விழுந்து விட்டன. மற்ற மரங்கள் ஆபத்தான நிலையில் எப்போது வேண்டுமானாலும் விழும் என்ற நிலையில் உள்ளன. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டுனர்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர்.

அகற்ற கோரிக்கை

இது குறித்து வாகன ஓட்டுனர்கள் கூறும்போது, இந்த சாலை விரிவுபடுத்தப்பட்ட போது மரங்களின் வேர்கள் பாதிக்கப்பட்டதால், மரங்கள் பட்டுவிட்டன. இந்த மரங்கள் எப்போது வேண்டுமானாலும் சாலையில் விழுந்து விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே பெரிய அளவிலான வாகன விபத்து ஏற்படுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையோரங்களில் உள்ள பட்டுப்போன மரங்களை அகற்ற வேண்டும் என்று கூறினர்.

மேலும் செய்திகள்