குடிநீர் வழங்க கோரி தோகைமலை ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

குடிநீர் வழங்க கோரி தோகைமலை ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

Update: 2016-12-22 22:45 GMT
தோகைமலை,

குடிநீர் வழங்க கோரி தோகைமலை ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

அவதி

கரூர் மாவட்டம் தோகைமலை ஊராட்சியில் உள்ள ஒத்தப்பட்டி பகுதியில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்காக அப்பகுதியில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியின் அருகே ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலம் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வறட்சியின் காரணமாக கடந்த 30 நாட்களுக்கும் மேலாக ஒத்தப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்க தொட்டியில் இருந்து கூடுதலாக அருகில் உள்ள 4 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒத்தப்பட்டி பகுதி பொதுமக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

முற்றுகை

ஒத்தப்பட்டி பகுதி மக்களுக்கு போதிய குடிநீர் வழங்கிவிட்டு, மீதம் உள்ள குடிநீரை மற்ற பகுதி கிராமங்களுக்கு வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ஒத்தப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வழங்க கோரி தோகைமலை ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு ஒன்றிய ஆணையர்கள் யாரும் இல்லை என்பதால் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பரபரப்பு

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த, ஒன்றிய மேலாளர்கள் குமரவேல், ராஜேந்திரன் ஆகியோரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். அப்போது ஒத்தப்பட்டி பொதுமக்களிடம் ஒன்றிய மேலாளர்கள் கூறுகையில், மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்