புதுவை மாநிலத்திற்கு திட்டமில்லா செலவிற்கான தொகையை உயர்த்தி தர வேண்டும் அருண்ஜெட்லியிடம், நாராயணசாமி வலியுறுத்தல்

புதுவை மாநிலத்திற்கு திட்டமில்லா செலவிற்கான தொகையை உயர்த்தி தர வேண்டும் அருண்ஜெட்லியிடம், நாராயணசாமி வலியுறுத்தல்

Update: 2016-12-22 23:00 GMT
புதுச்சேரி,

புதுவை மாநிலத்திற்கு திட்டமில்லா செலவிற்கான தொகையை உயர்த்தி தர வேண்டும் என்று மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியிடம், முதல்-அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தினார்.

நாராயணசாமி டெல்லி பயணம்

டெல்லியில் சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான கூட்டம் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார். தொடர்ந்து நேற்று மாலை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, விமான போக்குவரத்து துறை மந்திரி அசோக் கஜபதி ராஜூ, சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி. நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசினார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, மேலிட பார்வையாளர் முகுல் வாஷ்னிக் ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்.

உயர்த்தி தர வேண்டும்

இந்த சந்திப்பு குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-

புதுவை மாநில நிதித்துறை செயலாளர் கந்தவேலுவுடன் சென்று மத்திய நிதித்துறை மந்திரி அருண்ஜெட்லியை சந்தித்துப் பேசினேன். தொடர்ந்து 5 ஆண்டுகளாக புதுவை மாநிலத்திற்கு திட்டமில்லா செலவீனத்திற்கான தொகை உயர்த்தி தரப்படவில்லை. ஆனாலும் மத்திய அரசு ரூ.517 கோடி தான் தருகிறது. திட்டமில்லா செலவீனம் ரூ.1,100 கோடியில் இருந்து ரூ.2,400 கோடியாக உயர்ந்துள்ளது. எனவே திட்டமில்லா செலவிற்கான தொகையை உயர்த்தி தர வேண்டும். புதுவை மாநிலத்தின் பட்ஜெட் தொகையான ரூ. 6,655 கோடியில் இருந்து கூடுதலாக ரூ.500 கோடி தர வேண்டும் என வலியுறுத்தினேன். அவரும் மத்திய நிதித்துறை செயலாளரை அழைத்து புதுவை மாநிலத்திற்கு உதவ நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.

நிறைவேற்ற முடியாது

புதுவையில் உள்ள வங்கிகளில் பணம் இல்லை. இதனால் மக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர். எனவே புதிய ரூபாய் நோட்டுகளை புதுவைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். பண அட்டை மூலம் பரிவர்த்தனைகள் செய்ய புதுவையில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. கிராமப்புறங்களில் வங்கிகளோ, ஏ.டி.எம். மையங்களோ இல்லை. போதுமான அளவிற்கு சுவைப் எந்திரங்களும் இல்லை. எனவே பணம் அட்டை மூலம் பரிவர்த்தனை என்பதை புதுவையில் உடனே நிறைவேற்ற முடியாது என்று கூறி உள்ளேன். இதுதொடர்பாக மத்திய அரசு, புதுவை அரசுக்கு அழுத்தம் கொடுக்க கூடாது என்றும் அவ்வாறு அழுத்தம் கொடுத்தாலும் அதை நிறைவேற்ற முடியாது என்றும் நிதி மந்திரியிடம் தெரிவித்தேன்.

விமான போக்குவரத்து

விமான போக்குவரத்து துறை மந்திரி அசோக் கஜபதி ராஜூயை சந்தித்து பேசும் போது, புதுவையில் விமான போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக டெண்டர் வைக்கப்பட்டுள்ளது. டெண்டர் வருகிற 26-ந் தேதி திறக்கப்பட உள்ளது. அப்போது தான் புதுச்சேரியில் இருந்து விமான போக்குவரத்து தொடங்குவது யார் என்பது தெரியவரும்.

ஏர் இந்தியா நிறுவனம் புதுவையில் இருந்து விமான சேவை தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளேன். குறிப்பாக புதுவையில் இருந்து திருச்சி வழியாக பெங்களூருக்கும், திருப்பதிக்கும் விமான போக்குவரத்து தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளேன்.

மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி. நட்டாவை சந்தித்த போது, புதுவை அரசு மருத்துவக்கல்லூரியில் பட்டமேற்படிப்பினை தொடங்க அனுமதி அளிக்குமாறு கேட்டுக்கொண்டேன். அந்த கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிற்கு வரவும் வலியுறுத்தினேன். ஏற்கனவே இந்த கல்லூரி சார்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு அனுமதி அளிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.

பின்னர் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து புதுவை மாநில அரசியல் நிலவரம் குறித்து விளக்கினேன்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

கிறிஸ்துமஸ் விழா

முதல்-அமைச்சர் நாராயணசாமி டெல்லியில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடக்கும் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்ள கன்னியாகுமரிக்கு செல்கிறார். கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்ளும் அவர் விழா முடிந்ததும் நாளை (சனிக்கிழமை) புதுச்சேரி திரும்புகிறார்.

மேலும் செய்திகள்