மாவட்டம் முழுவதும் தனிநபர் கழிப்பிடங்கள் கட்ட ரூ.50.15 கோடி மானியம் கலெக்டர் ஆசியா மரியம் தகவல்

நாமக்கல் மாவட்டம் முழுவதும் இதுவரை தனிநபர் கழிப்பிடங்கள் கட்ட அரசின் மானியமாக ரூ.50 கோடியே 15 லட்சம் வழங்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஆசியா மரியம் கூறினார். கலெக்டர் ஆய்வு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் க

Update: 2016-12-22 19:34 GMT

பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம் முழுவதும் இதுவரை தனிநபர் கழிப்பிடங்கள் கட்ட அரசின் மானியமாக ரூ.50 கோடியே 15 லட்சம் வழங்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஆசியா மரியம் கூறினார்.

கலெக்டர் ஆய்வு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத ஊராட்சிகளாக உருவாக்கிட அரசு மானிய நிதி உதவியுடன் கட்டப்பட்டு வரும் தனிநபர் கழிப்பிட திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேற்று ஆய்வு செய்தார்.

கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொந்தளம் ஊராட்சி, வடகரையாத்தூர் ஊராட்சி, இருக்கூர் ஊராட்சி பகுதிகளில் ரூ.12 ஆயிரம் மானிய நிதி உதவியுடன் கட்டப்பட்டு உள்ள தனிநபர் கழிப்பிடங்களை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விழிப்புணர்வு பணிகள்

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழகத்தில் திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத மாவட்டங்களாக உருவாக்கிடும் பொருட்டு, முதற்கட்டமாக நாமக்கல் மாவட்டம் உள்ளிட்ட 7 மாவட்டங்களை அரசு தேர்வு செய்து, தூய்மை பாரத திட்டத்தின் மூலம் இப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டு உள்ளது. இதன்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சிகளையும் திறந்த வெளியில் மலம் கழித்த இல்லாத ஊராட்சிகளாக உருவாக்கிட திட்டமிடப்பட்டு, மாவட்டம் முழுவதும் அதற்கான விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளில் 2015–16–ம் ஆண்டில் 107 கிராம ஊராட்சிகள் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத கிராமங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிதியாண்டில் நவம்பர் மாதம் வரை 30 கிராம ஊராட்சிகளில் அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிப்பிடங்கள் கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் வருகிற 31.3.2017–ம் ஆண்டுக்குள் எஞ்சியுள்ள 185 கிராம ஊராட்சிகளிலும் 100 சதவீதம் கழிப்பிடங்கள் கட்டி முழு பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டு, திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தை உருவாக்கிட அனைத்து பணிகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரூ.50.15 கோடி மானியம்

இதுவரை மொத்தம் 41 ஆயிரத்து 794 தனிநபர் கழிப்பிடங்கள் கட்ட ரூ.50.16 கோடி அரசு மானியமாக சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் கழிப்பிடம் இல்லாத 56 ஆயிரத்து 889 வீடுகளில் 25 ஆயிரம் தனிநபர் இல்லக் கழிப்பிடங்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டு அவற்றில் 9 ஆயிரத்து 64 கழிவறை பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் கவிதா, கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கந்தசாமி, சீனிவாசன், உதவிப்பொறியாளர்கள் ரவி, பழனிச்சாமி, தூய்மை பாரத இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமுதஸ்ரீ உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்