சதுரகிரி மலையில் சட்ட விரோதமாக மணல், ஜல்லி எடுத்ததாக புகார்: மதுரை கலெக்டர் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு

சதுரகிரி மலையில் சட்ட விரோதமாக மணல், ஜல்லிக்கற்கள் எடுத்து கட்டிடங்கள் கட்டியது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க மதுரை கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மணல், ஜல்லி எடுத்ததாக புகார் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பைச் சேர்ந்த முன்னாள் கவு

Update: 2016-12-22 19:21 GMT

மதுரை,

சதுரகிரி மலையில் சட்ட விரோதமாக மணல், ஜல்லிக்கற்கள் எடுத்து கட்டிடங்கள் கட்டியது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க மதுரை கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மணல், ஜல்லி எடுத்ததாக புகார்

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஈஸ்வரி சுந்தரமூர்த்தி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறியிருந்ததாவது:–

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ரூ.4.65 கோடி மதிப்பில் 50 கழிப்பறைகள், 4 தங்கும் அறைகள் கட்டுவதற்கு கடந்த ஆண்டு டெண்டர் விடப்பட்டது. அப்போது அந்த கட்டிடம் கட்டுவதற்கு தேவையான மணல் மற்றும் ஜல்லிக்கற்களை சதுரகிரி மலையில் இருந்து எடுக்கக்கூடாது. குவாரிகளில் இருந்துதான் கொண்டு வர வேண்டும் என்று விதிமுறை தெரிவிக்கப்பட்டது.

ஆனால் சுந்தரமகாலிங்கம் கோவிலின் அருகில் உள்ள ஓடையில் பிலாவடி கருப்பசாமி கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு மணல் மற்றும் கற்களை சட்டவிரோதமாக எடுத்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.

இதனால் விதிகளை மீறிய ஒப்பந்ததாரர் மற்றும் உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை மாவட்ட கலெக்டர், லஞ்ச ஒழிப்பு போலீசார், இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்டவர்களுக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லை. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்று ஏற்கனவே நான் தாக்கல் செய்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

ரத்து செய்ய வேண்டும்

இதற்கிடையே என்னுடைய புகாரை விசாரித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.72 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தது. இது பெரும் தவறு. அதிகாரிகளுக்கு தெரிந்து தான் இந்த விதிமீறல் நடந்து உள்ளது. இதுபோன்ற தவறுகளை அனுமதித்தால் கோவில் உள்ள பகுதியில் இயற்கை சீற்றங்கள் ஏற்படும். கடந்த ஆண்டு கூட சதுரகிரியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 6 பேர் அடித்து செல்லப்பட்டு இறந்தனர். எனவே லஞ்ச ஒழிப்புத்துறை அபராதம் விதித்துள்ளதை ரத்து செய்து, முறைகேட்டில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர், அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

கலெக்டருக்கு உத்தரவு

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில், மனுதாரரின் புகார் குறித்து ஒரு மாதத்துக்குள் பரிசீலித்து உரிய நடவடிக்கையை மதுரை கலெக்டர் எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்