கடையம் அருகே பஸ்– கார் மோதல்: அக்குபஞ்சர் டாக்டர் பலி; 3 பேர் படுகாயம் நண்பர்களுடன் ராமநதி அணையில் குளித்து விட்டு திரும்பிய போது பரிதாபம்

கடையம் அருகே பஸ்– கார் மோதிக் கொண்ட விபத்தில் ஆசிரியரின் மகன் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர். தனது நண்பர்களுடன் ராமநதி அணையில் குளித்து விட்டு ஊருக்கு திரும்பிய போது இந்த சம்பவம் நடந்து உள்ளது. பஸ்– கார் மோதல் நெல்லை மாவட்டம் தென்காசியில் இருந்து

Update: 2016-12-22 23:00 GMT

கடையம் அருகே பஸ்– கார் மோதிக் கொண்ட விபத்தில் ஆசிரியரின் மகன் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர். தனது நண்பர்களுடன் ராமநதி அணையில் குளித்து விட்டு ஊருக்கு திரும்பிய போது இந்த சம்பவம் நடந்து உள்ளது.

பஸ்– கார் மோதல்

நெல்லை மாவட்டம் தென்காசியில் இருந்து அம்பைக்கு நேற்று இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சை கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 51) என்பவர் ஓட்டி வந்தார். இதில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.

அந்த பஸ் கடையம் அருகே உள்ள மாதாபுரம்– எல்லைப்புளி விலக்கு அருகில் தென்காசி– அம்பை மெயின் ரோட்டில் வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிரே கார் ஒன்று வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் காரும், பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர்.

இதை பார்த்த அந்த பகுதியில் உள்ளவர்கள் ஓடி வந்து காரில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கடையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது, காரின் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அக்குபஞ்சர் டாக்டர்

விசாரணையில், பாவூர்சத்திரம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் செபஸ்டியான். இவர் துவரங்காடு அரசு பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி செல்லத்தாயார்புரம் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுடைய மகன் ரெக்ஸ் மெல்வின் (29). இவர் அக்கு பஞ்சர் டாக்டருக்கு படித்து வந்தார். மேலும் காரை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலையில் ரெக்ஸ் மெல்வின் தனது நண்பர்களான மதன்குமார், பழனிக்குமார், ராஜேசுவரன் ஆகியோருடன் ஒரு காரில் கடையம் ராமநதி அணைக்கு குளிக்க சென்றனர். அணையில் குளித்து விட்டு இரவில் காரில் ஊருக்கு வந்து கொண்டு இருந்தார்.

கடையம் அருகே வந்த போது காரும், பஸ்சும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் ரெக்ஸ் மெல்வின் சம்பவ இடத்திலேயே பலியானதும், அவருடைய நண்பர்கள் மதன்குமார், பழனிக்குமார், ராஜேசுவரன் ஆகியோர் படுகாயம் அடைந்ததும் தெரியவந்தது.

நண்பர்களுக்கு சிகிச்சை

பலியான ரெக்ஸ் மெல்வின் உடலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த மதன்குமார், பழனிக்குமார், ராஜேசுவரன் ஆகியோர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்தில் பஸ் டிரைவர் சண்முகசுந்தரம், கண்டக்டர் ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்