ரூ.8 கோடியே 60 லட்சம் செலவில் ஆழியாறு அணையில் பராமரிப்பு பணிகள் மும்முரம்

ஆழியாறு அணையில் ரூ.8 கோடியே 60 லட்சம் செலவில் பராமரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆழியாறு அணை 1962–ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜரால் பரம்பிக்குளம்–ஆழியாறு திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மிக முக்கிய அணையாக பரம்பிக்குளம் மற்றும் ஆ

Update: 2016-12-22 22:45 GMT

ஆனைமலை,

ஆழியாறு அணையில் ரூ.8 கோடியே 60 லட்சம் செலவில் பராமரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஆழியாறு அணை

1962–ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜரால் பரம்பிக்குளம்–ஆழியாறு திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மிக முக்கிய அணையாக பரம்பிக்குளம் மற்றும் ஆழியாறு அணைகள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 600 ஏக்கர் பரப்பளவில் ஆழியாறு அணை உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் கொள்ளளவு 120 அடி ஆகும். இந்த அணையின் மூலம் பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு மற்றும் கேரள நீர்பாசன பகுதிகள் பயனடைந்து வருகின்றன. மேலும் லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் ஆழியாறு அணை திகழ்ந்து வருகிறது.

இந்த அணை கட்டப்பட்டு 55 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அதன் சுற்றுச்சுவர், மதகுகள் மற்றும் மின்சாதன பொருட்கள் ஆகியவை சிதிலமடைந்து காணப்பட்டன. இதையடுத்து அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் வரைவுத்திட்டம் தயாரித்து தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தனர்.

பராமரிப்பு பணிகள்

தமிழக அரசு ஆழியாறு அணையில் அணையின் கரைப்பகுதி மேம்பாடு, மதகுகள் சீரமைப்பு, மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளுக்காக ரூ.8 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. தற்போது அணையில் பராமரிப்பு பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அணையின் கரைப்பகுதி சுவர்கள் மழைநீர் அரிப்பில் இருந்து தடுக்க தடுப்புச்சுவர் அமைக்கும் பணியும் விரைவாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:–

ஆழியாறு அணையில் பராமரிப்பு பணிகளுக்காக தமிழக அரசு ரூ.8 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியின் மூலம் பழுதடைந்திருந்த பக்கவாட்டு சுவர்கள் பராமரிக்கப்பட்டு பட்டு வருகிறது. வெள்ளம் ஏற்படும் காலத்தில் தடுப்புச்சுவர்கள் அரிப்பு ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டு உள்ளது. மதகுகள் சீரமைக்கும் பணியும் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. விரைவில் அனைத்து பணிகளும் நிறைவடையும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்