திண்டுக்கல் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு வாகன நிறுத்துமிடங்கள் அமைக்க முடிவு 6 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு
திண்டுக்கல் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, முக்கிய இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 6 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். போக்குவரத்து நெரிசல் திண்டுக்கல் நகரில் அனைத்து சாலைகளிலும் பெரிய வர்த்தக ந
திண்டுக்கல்,
திண்டுக்கல் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, முக்கிய இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 6 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
போக்குவரத்து நெரிசல்திண்டுக்கல் நகரில் அனைத்து சாலைகளிலும் பெரிய வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. அவற்றிற்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்களில் பலர் கார், மோட்டார்சைக்கிள் ஆகிய வாகனங்களில் வருகின்றனர். இதில் ஒருசில நிறுவனங்களுக்கு மட்டுமே தனியாக வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன. பெரும்பாலான நிறுவனங்களுக்கு தனியாக வாகன நிறுத்துமிடம் இல்லை.
இதனால் வாடிக்கையாளர்கள் தங்களுடைய வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தும் நிலை ஏற்படுகிறது. திண்டுக்கல்லில் வாகன போக்குவரத்து நாளுக்குநாள் அதிகரித்து வரும் சூழலில், சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் நெரிசல் ஏற்பட்டது. இதை தவிர்க்கும் வகையில் முக்கிய சாலைகள் இருவழிப்பாதைகளாக மாற்றப்பட்டன. அதன்படி ஆர்.எஸ்.சாலை, ஏ.எம்.சி.சாலை, மெயின்ரோடு, பழனி சாலை, திருச்சி சாலை ஆகியவை இருவழிச் சாலைகளாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வாகன நிறுத்துமிடம்எனினும், பல சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. எனவே, திண்டுக்கல் நகரின் முக்கிய பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்களை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக இடங்களை தேர்வு செய்யும் பணி நேற்று நடந்தது. இதையொட்டி மாநகராட்சி அதிகாரிகள், திண்டுக்கல் நகர போக்குவரத்து போலீசார் இணைந்து நகரில் முக்கிய பகுதிகளில் பார்வையிட்டனர்.
இதில் சாலை ரோடு, மெயின்ரோடு, மாநகராட்சி பின்புறமுள்ள ஆர்.எஸ்.சாலை, பழனி சாலை, திருச்சி சாலை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? என ஆய்வு செய்தனர். மேலும், மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து ஆகியவற்றை பாதிக்காத வகையில் இருசக்கர, கார் வாகன நிறுத்துமிடங்களை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் கூட்டாக அறிக்கை தயாரித்து கலெக்டரிடம் சமர்ப்பிக்க உள்ளனர். பின்னர் கலெக்டரின் ஆலோசனை, ஒப்புதலின் அடிப்படையில் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.